Tamilnadu

விலை உயர்ந்த காய்கறிகள் விலை: பண்ணை பசுமை கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்யும் தமிழ்நாடு அரசு !

திடீர் வெயில் திடீர் மழை என மாறி மாறி வந்த காலநிலை காரணமாக தக்காளி விளைச்சலில் பெறும் மாற்றம் இருந்தது. தக்காளி காய்கள் பழுக்காமல் செடியிலேயே வெம்பி விட்டதால், காய்கறி சந்தைகளுக்கு வரத்து வெகுவாக குறைந்தது..

அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைந்ததால் மொத்த விற்பனையில் தக்காளி கிலோ 90 ரூபாய்க்கும் சில்லரை விற்பனையில் 110 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெங்காயம் மொத்த விற்பனையில் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் மழைக்காலம் வந்தாலே எளிதில் அழுகி விடக்கூடிய பீன்ஸ் விலை மொத்த விற்பனையில் 110 ரூபாய்க்கும், சில்லறை விற்பனையில் 130 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் இந்த விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் காய்கறிகளின் விலை சற்று உயர்ந்ததை அடுத்து, பொதுமக்கள் நலன் கருதி கூட்டுறவுத்துறையின் மூலம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பண்ணை பசுமை நுகர்வோர் பசுமை கடைகள், நகரும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே தக்காளி மறறும் இதர காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது..

இதற்காக நாசிக்கில் இருந்து வந்த வெங்காயம், தேனாம்பேட்டை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாநகர் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.40-க்கும், ஒரு கிலோ ரூ.49-க்கும் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரம் ஒருவருக்கு அதிகபட்சம் 2 கிலோ மட்டும் வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read: வடசென்னை வளர்ச்சித் திட்டம் : அரசு அலுவலர்களுக்கு அதிரடி உத்தரவிட்ட துணை முதலமைச்சர்... விவரம் என்ன ?