Tamilnadu

”பொய் சொல்வதை பழனிசாமி நிறுத்திக் கொள்ள வேண்டும்” : அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி!

”அதிமுக ஆட்சியின் போது ஒவ்வொரு துறைக்கும் நிதி வழங்க பல்வேறு நிபந்தனைகளை ஒன்றிய அரசு விதித்த போது அதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டவர்கள் அ.தி.மு.க.வினர்தான்” என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ”அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அறிவுறுத்தலின் பேரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. சொத்து வரி என்பது முதன் முதலில் அதிமுக ஆட்சியில்தான் உயர்த்தப்பட்டது என்பதை அவருக்கு நினைவுபடுத்த கடமைப்பட்டிருக்கிறேன்.

2018 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் இருந்தபோது , குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கான சொத்து வரியை 50 முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தினார்கள். அதில் 15 மாநகராட்சிகள் , 121 நகராட்சிகள் , 528 பேரூராட்சிகள் , என அனைத்து பகுதிகளிலும் சொத்து வரி 1.04.2018 முதல் அமல்படுத்தப்பட்டது. அதற்கு பல்வேறு எதிர்ப்புகள் வந்த போதும் அதை கட்டாயமாக வசூல் செய்தார்கள்.

அந்தநேரத்தில்தான் “குறிப்பிட்ட காலத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை அதிமுக நடத்த வேண்டும்“ என நீதிமன்றம் குட்டு வைத்தது. அதன்பிறகு, உள்ளாட்சி தேர்தலை நடத்தினார்கள். உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டிய சூழல் வந்த காரணத்தினால்தான் சொத்து வரி உயர்வை 2019ஆம் ஆண்டு திரும்ப பெறுவதாக அறிவித்தார்கள். 2019ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்த பிறகு, அப்போதையை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும் போது, “சொத்து வரி உயர்வை திரும்ப பெறுவது என்பது தற்காலிகமானது” என்றுதான் கூறினார். ஒன்றிய அரசு நிதிக் குழுவிற்கு வழங்கியுள்ள அறிவுரைப்படி, நிதிக்குழு சொத்து வரியை ஒவ்வொரு ஆண்டும் உயர்த்தவேண்டும் எனக் கூறியதோடு, உள்ளாட்சி தேர்தல்கள் முடிவுற்று நிர்வாகத்திற்கு வரும்போது செலவு செய்த தொகைக்கு நிகராக ஒன்றிய அரசு வழங்கவேண்டிய நிதியை பெற, நிதிக்குழு சொல்லும் வரி உயர்வை செய்து தான் ஆகவேண்டும் என்று தான் அதிமுக அன்று சொன்னது.

அதேபோலதான், மின் கட்டணம் என்றதும் அதிமுக வினர் பதற்றமடைகிறார்கள். உதய் மின் திட்டத்தில் தமிழகத்தை இணைத்து கட்டண உயர்வுக்கு அடித்தளமிட்டதும் அவர்கள்தான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உயிரோடு இருந்தபோது எதையெல்லாம் எதிர்த்தாரோ, அதன்பிறகு முதல்வரான எடப்பாடி பழனிசாமி அதையெல்லாம் செய்தார். அவர்கள் எதையெல்லாம் துவங்கி, நடைமுறையில் வைத்து சென்றார்களோ, அதையெல்லாம் இன்று புதிதாக எதிர்ப்பது போல் சொல்கிறார்கள். அதிமுகவிற்குள்ளாக பல்வேறு கலகம் நடைபெறுகிறது. வேலுமணி புதிய யுக்தியை கையாள்கிறார் , ஓ.பி.எஸ் அமித்ஷாவை சந்திக்கிறார் என்ற செய்திகள் வரும்போது, தன்னுடைய கட்சியை தக்க வைத்துக்கொள்ள நடத்தும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு அரசை தேவையில்லாமல் குற்றம் சொல்வதும், அவருடைய ஆட்சியின் போது துவக்கி வைத்தவைகளை எல்லாம் தற்போது புதிதாக நடப்பது போல குற்றம்சாட்டுவதுமாக இந்த போராட்டங்கள் அமைந்துள்ளன. இந்த போராட்டம் எப்படி நடைபெற்றுள்ளது என்பதையும் பொதுமக்கள் கவனித்துகொண்டுதான் இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு கூறிக்கொள்வது ஒன்றுதான், சொத்து வரி உயர்வு , மின் கட்டணம் போன்று அதிமுக ஆட்சியில் நடைமுறைக்குக் கொண்டு வந்ததை இப்போது புதிதாக கொண்டு வந்தது போல மக்களை திசைதிருப்ப வேண்டாம், மக்கள் அத்தனையையும் அறிவார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில், முதல்வர் கொண்டு வந்த திட்டங்களுக்கு பொதுமக்கள் அளித்த பாராட்டு சான்றிதழ்தான், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 40 க்கு 40 என்ற வெற்றி. அதை பொறுத்துக் கொள்ள முடியாமல், தற்போது புதிதாக பொதுமக்களுக்காக குரல் கொடுப்பது போல வரும் எடப்பாடி பழனிசாமி முதலில் அவரின் முதுகை திரும்பி பார்த்துக்கொள்ள வேண்டும்.

அதேபோல் விமான சாகச நிகழ்ச்சியின் போது நடைபெற்ற உயிரிழப்பிற்காகவும் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் சிந்தியுள்ளார். விமான சாகச நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் யார் என்பதை எடப்பாடி பழனிசாமி அறிவாரா? என்பதை முதலில் அறிவிக்க வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததாக புதிதாக கதை கட்ட முயல்கிறார். தூத்துக்குடியில் உயிர்களை துள்ளத் துடிக்க சுட்டுக்கொன்ற அரசு எடப்பாடி பழனிசாமி தலைமயிலான அரசு. அதையெல்லாம் மறைத்து தற்போது மக்கள் மீது அபிமானம் கொண்டவராக இந்த போராட்டங்களை நடத்துவது கண்டிக்கத்தக்கது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகுகூட , எத்தனை புதிய தொழிற்சாலைகள் எவ்வளவு முதலீட்டில் வர இருக்கின்றன, அதனால் எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது போன்றவைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி முதல்வர் கொண்டு செல்லும் நேரத்தில், ஒத்துழைக்க மனம் வராவிட்டாலும் பொய்யான தகவல்களை கூறிப் போராட்டம் நடத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் .

ஒன்றிய அரசு நமக்கு வரவேண்டிய பங்குதொகையை எப்படி வழங்குகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஒவ்வொரு துறைக்கும் ஒன்றிய அரசு வழங்க வேண்டிய நிதிக்கு அவர்கள் சில நிபந்தனைகளை விதித்த போது அதை ஏற்றுக்கொண்டு கையெழுத்திட்டவர்கள் அதிமுக ஆட்சியினர் தான். அதனால்தான் தற்போதைய சிக்கல்கள். ஒரு ட்ரில்லயன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாட்டை மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிநடத்துகிறார். அதற்கு ஒத்துழைக்க மனம் வராவிட்டாலும், பொய்யான தகவல்களை கூறி போராட்டம் நடத்துவது அதிமுக நிறுத்திக்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: வடகிழக்கு பருவமழை - அலைபேசிகளை OFF செய்யக் கூடாது : அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!