Tamilnadu

தரம்தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்தலாமா? : உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியனுக்கு கி.வீரமணி கேள்வி!

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அவர்கள், மூத்த வழக்குரைஞர் திரு.பி.வில்சன் அவர்கள், நீதிமன்றத்தில் கூறவந்த கருத்தினைச் சற்றும் பொறுமையோடு செவி மடுக்காமல், மூத்த வழக்குரைஞரையும், நாடாளுமன்றத்தையும் அவமதிக்கும் வகையிலும், உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் தரந்தாழ்ந்த சொற்களைப் பயன்படுத்தியது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

சமூக வலைதளத்தில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஒரு மூத்த நீதிபதி, மற்றொரு பெண் நீதிபதி ஆகிய இருவர் அமர்வின்முன், ஒரு ‘ரிட்’ அப்பீல் மனு வழக்கு (தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் நியமனங்கள்பற்றிய வழக்கு அது) அதில், மூத்த வழக்குரைஞர் ஆஜராகி, காணொலிமூலம் வாதாடுகிறார்.

மூத்த வழக்குரைஞர் வில்சன் நீதிமன்றத்தில் சொல்லத் தொடங்கியதைக் கூடப் பொறுமையாகக் கேட்கத் தயாராக இல்லாத நீதிபதி! அந்த மூத்த வழக்குரைஞர், இந்த வழக்கில் ஏற்கெனவே ஒற்றை நீதிபதியாக இருந்தவரே, இந்த அமர்வில் நீதிபதியாக அமர்ந்துள்ளார் என்று கூறத் தொடங்கினார்.

அவ்வளவுதான், உடனே மிகுந்த ஆத்திரத்துடன், கோபாவேசம் கொழுந்து விட்டெரியும் நிலையில், உரத்த குரலில், வெறுப்பின் வெளியீடாக, ‘‘தன்னால் இதுபோன்ற வாதங்களை ஏற்க முடியாது. ஒரு நீதிபதி வழக்கிலிருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று ஒரு சீனியர் வழக்குரைஞர் கூறுவதை அனுமதிக்க முடியாது’’ என்று ஓசையுடன் கூறுகிறார்.

வாதாட வந்த அந்த மூத்த வழக்குரைஞர் (Recusal கேட்கவில்லை என்று) விளக்கம் கூறுவதைச் சற்றுக்கூட காதில் வாங்கிக் கொள்ளாமலேயே –தொடர்ந்து அந்த மூத்த வழக்குரைஞர்பற்றி தனிப்பட்ட அவர் வகிக்கும் நாடாளுமன்ற பதவி – அதுவும் மூத்தோர் அவை என்று வர்ணிக்கப்படும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிபற்றி, வழக்குக்கு முற்றிலும் சம்பந்தப்படாத சொற்களை உதிர்த்துக் கொட்டி, தனது ‘ரெளத்திரத்தினையும்‘ வெறுப்பையும் (ill-will) பட்டாங்கமாய் வெளிப்படுத்தினார்.

அந்தப்படி நடந்துகொண்ட நீதிபதி ஆர்.சுப்ரமணியன் அவர்கள்; அவரது சுட்டெரிக்கும் பார்வைக்கு ஆளாகி, ‘செய்யாத குற்றத்துக்கு ஜென்ம தண்டனை‘ என்ற சொலவடைக்கொப்ப, பாதிப்புக்கு ஆளானவர், நாடாளுமன்ற மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் பி.வில்சன் அவர்கள்.

‘‘Oh, so fantastic, fantastic Mr.Wilson.... Do all these gimmicks in the Parliament, not before us.‘‘

‘‘ஓ, மிகவும் வேடிக்கை, விந்தை – வில்சன் அவர்களே, இந்த விசித்திர கவர்ந்திழுக்கும் கலைகளையெல்லாம் நாடாளுமன்றத்தில் வைத்துக் கொள்ளுங்கள்; எங்கள்முன் வேண்டாம்‘‘ என்று பொரிந்து தள்ளுகிறார்!

தரந்தாழ்ந்த ஒரு சொல்லை ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி உபயோகிக்கலாமா?

அதுமட்டுமல்ல, அந்த வீடியோவில் பதிவாகியுள்ள மற்றொரு தரம் தாழ்ந்த உணர்வின் பிரதிபலிப்பாக ஒரு கொச்சை அமெரிக்க ஆங்கில பதப் பிரயோகமும் அந்த நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் அவர்களிடமிருந்து வெடித்துக் கிளம்பியுள்ளது.

‘You guys‘ என்று பன்மையில் பொத்தாம் பொதுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையுமே குறிக்கும் வகையில், குறிப்பிட்ட வழக்குக்கோ, மூத்த வழக்குரைஞர் வில்சன் எம்.பி., அவர்களது வாதத்திற்கோ எந்தவித தொடர்பும் அற்ற வகையில் கூறி, தனது உள்ளார்ந்த வெறுப்பை வெளிப்படையாகக் காட்டும் வகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அத்துணைப் பேரையோ அல்லது தி.மு.க.வின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையோ அவதூறு செய்வதாக எண்ணி, மிகப்பெரிய அவதூறை அவர் இழைத்துள்ளார்! இதற்குரிய நோக்கம் சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட தி.மு.க. அரசின் மீதுள்ள வெறுப்பின் விளைவா?

நாடாளுமன்றத்திற்கும், நீதிமன்றத்திற்கும் ஒரு மோதலை உருவாக்கும் நீதியின் சொல்லாடல்!

இது நாடாளுமன்றத்தின் உரிமையைப் பாதிக்கும் மிகப்பெரிய பிரச்சினையாக எழுவதற்கு வாய்ப்பளிக்கக் கூடியதாகும். நாடாளுமன்றத்தில் இந்தப் பிரச்சினையை Privilege Committee எழுப்பக் கூடும். அதை நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பினால், நாடாளுமன்ற – நீதிமன்ற மோதலுக்குமே வழிவகுக்கக் கூடிய பேராபத்தை உருவாக்காதா?

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் இதற்குத் தக்க பரிகாரம் காணுவது சட்டத்தை, ஆட்சியினை சரிவர நடத்த முக்கியமானதாகும்!

வாதாடிய மூத்த வழக்குரைஞர் மிகுந்த பணிவுடன், அந்த மூத்த நீதிபதிமுன் கூறுகிறார்:‘‘தான் அப்படி Recusal எதுவும் கேட்கவில்லை; ஏற்கெனவே உள்ள மரபின்படி, ஒற்றை நீதிபதியாக இருந்து விசாரித்து தீர்ப்பளித்த அதே நீதிபதி, மேல்முறையீட்டு அமர்வில் இடம்பெற்றள்ளார்!‘‘ என்ற தகவலைத்தான் சுட்டிக் காட்டினேன் என்றார். அதற்குள் கடகடவென இவர் ஆவேசமாகி தேவையற்ற, இந்த வழக்கிற்கு சிறிதும் சம்பந்தமில்லாத வார்த்தைகளை உதிர்த்து, ஆத்திரம் கொப்பளிக்கவேண்டிய அவசரமும், அவசியமும் என்ன என்பதைப்பற்றி பலரும் பல கோணத்தில் பேசு பொருளாகி, மக்கள் மன்றத்தில் அது இப்போது உலா வரத் தொடங்கியுள்ளது.

இப்படியெல்லாம் நீதிபதி பேசுவதன் பின்னணியில்ஏதோ ஒரு காரணம் இருக்கவேண்டும் என்ற கருத்தை உருவாக்காதா?

மனோதத்துவப்படி, இப்படிப்பட்ட அங்கலாய்ப்பும் அவசியமற்ற சொற்களும் அந்த நீதிபதி அவர்களிடம் வெளிவருவதற்கு ஏதோ முக்கிய காரணங்கள் இருக்கவேண்டும் என்று – பரவலாக கருத்தை இது உருவாக்கிவிடும் என்பதாலேயே இதனைச் சுட்டிக்காட்டி, தலைமை நீதிபதியிடம்,

1. மெட்ராஸ் அய்க்கோர்ட் அட்வகேட்ஸ் அசோசியேசன் ஒரு மனுவை அனுப்பியுள்ளது.

2. லாயர்ஸ் சென்டர் ஃபார் டெமோக்கிரசி அன்ட் சோசியல் காசாஸ்

3. பெடரேசன் ஆஃப் பார் அசோசியேசன் ஆஃப் தமிழ்நாடு, பாண்டிச்சேரி ஆகியவை – சென்னை உயர்நீதிமன்ற மாண்பமை தலைமை நீதிபதி அவர்களுக்கு இதுபற்றி உரிய நடவடிக்கை தேவை என்று விண்ணப்பித்துள்ளனர்!

குறிப்பிட்ட நீதிபதி ஆர்.சுப்ரமணியன் அவர்கள் ஏன் இப்படி ill-Will என்ற வெறப்புணர்வைக் கொட்டியிருக்கிறார் என்பதற்கு ஒரு பின்னணியும் உள்ளது.

அவர் தன்னை ஒரு பச்சை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதாகக் காட்டிக் கொள்ளும் வகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஓர் அங்கமான ABVS என்ற அகில பாரத் வழக்குரைஞர்கள் சங்கத்தின் தமிழ்நாடு கிளை நடத்திய இரண்டு நாள்கள் ‘அப்பியாஸ்வர்கா‘ (எல்லாம் சமஸ்கிருத பெயர்களே) ‘அகில பாரதீய அதிவாக்த பரிஷத்’ (ABAP) என்ற அமைப்பில் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்ள இசைந்து, அது ஓர் அழைப்பிதழ்மூலம் நமக்குக் கிடைத்துள்ளது. அந்நிகழ்வில் அவரும் பங்கேற்ற செய்தியும் நாளிதழ்களில் வெளிவந்துள்ளது. அந்த அழைப்பையும், நாளிதழில் வெளிவந்த செய்தியையும் அருகில் காண்க!

நீதிபதி நியமனங்களில் சமூகநீதி தேவை என்ற கருத்தைமூத்த வழக்குரைஞர் பேசியது ஒரு காரணமா?

நீதித்துறை நியமனங்களில் இட ஒதுக்கீடு – அரசமைப்புச் சட்டம் உத்திரவாதம் அளித்துள்ள சமூகநீதி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதை நாடாளுமன்றத்திலும், முந்தைய தலைமை நீதிபதிகளை நேரில் சந்தித்தும் திரு.பி.வில்சன் போன்றவர்கள் வலியுறுத்தி, அந்தக் கொள்கை உச்சநீதிமன்றக் கொலிஜியத்தில் அண்மைக்காலங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டு, பரிந்துரைகளில்கூட அது வெளிப்படைத்தன்மையாக வந்ததால், ‘‘இத்தகைய உயர்ஜாதி (பார்ப்பன) நீதிபதிக்கு ரவுத்திரமும், வெறுப்பும் இவர்மீதும், இவர் சார்ந்த தி.மு.க.மீதும் பீறிட்டுக் கிளம்புகிறது போலும்‘‘ என்று பேசப்படும் நிலை பொதுவானவர்கள் பலரிடமும் காணப்படுகிறது!

ஏற்கெனவே 2.9.2024 அன்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மற்ற நீதிபதிகள் சஞ்சய் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த், ரிஷிகேஷ் ராய் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில், இதுபற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தலில் ஒரு பகுதியாக, ‘‘........நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது, சகஜமான கருத்துகளை வெளியிடுவதை நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்றிடுவோர், குறிப்பாக நீதிபதிகள் தவிர்த்திடவேண்டும். இதுபோன்ற சகஜமான அவதானிப்புகள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளைப் பிரதிபலிக்கக் கூடும்!’’

நீதிபதிகள் சகஜமான வார்த்தைகளை கூறும் பொழுது கவனம் தேவை என்று உச்சநீதிமன்ற அமர்வு அறிவுறுத்தவில்லையா?

குறிப்பிட்ட இந்த சென்னை வழக்கு விசாரணையின்போது நடந்த நிகழ்வில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அறிவுறுத்தல் நூற்றுக்கு நூறு பொருந்தக்கூடிய ஒன்று.

இந்திய அரசமைப்புச் சட்டப்படி நீதிபதிகள் பதவியேற்குமுன் பிரமாணம் எடுத்துக்கொள்ளும் வாசகங்கள் (இந்திய அரசமைப்புச் சட்டத்திலேயே உள்ளது).

ஷெட்யூல் 3 இல் “I, .... having been appointed Judge of the High Court at (or of) ..........do swear in the name of God / solemnly affirm that I will bear true faith and allegiance to the Constitution of India as by law established, that I will duly and faithfully and to the best of my ability, knowledge and judgment perform the duties of my office without fear or favour, affection or ill-will and that I will uphold the Constitution and the laws.”

இதன்படி, குறிப்பிட்ட நீதிபதியின் நீதிமன்ற ஆவேசமும் ஏற்க இயலாத, எவரும் முகம் சுளிக்கக் கூடிய சொற்களும் அவரது ill-will என்ற வெறுப்பும் – வாதாடிய வழக்குரைஞருக்கும், பொதுவாகவே நாடாளுமன்ற உறுப்பினர் பெருமக்களுக்கும் கண்ணியக் குறைவை ஏற்படுத்தியுள்ளதாக ஆகாதா?

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல, அரசமைப்புச் சட்ட முகப்புரை Preamble இல் உள்ள Dignity of the individual என்ற தனி மனித கண்ணியத்தையே சூறையாடியதாக ஆகாதா? இதுபற்றிய தக்க நடவடிக்கைளை அந்த நீதிபதி, இவர்களும் Administrative Judge என்பது, கடந்த 9 மாதங்களுக்குமேல் தொடர்ந்து நீடிக்கச் செய்வது எவ்வகையில் நியாயமாகும்?

பொதுமக்களின் கிளர்ச்சி தவிர்க்க முடியாததாகிவிடும்!

மற்ற பல வழக்குகளில் மூத்த அரசு அதிகாரிகளை நீதிமன்றத்திற்கு நேரில் அழைத்து வரச் சொல்லி விளக்கம் கேட்கும் நிகழ்ச்சிகளில்கூட இந்த நீதிபதி, வந்தவர்களின் கண்ணியத்தையே குலைக்கும் வகையில், ‘‘பெட்டி படுக்கையுடன் ஜெயிலுக்குப் போகத் தயாராக வந்துள்ளீர்களா?‘‘ என்று பலரிடம் கேட்பது முறைதானா? நனி நாகரிகப் பண்பாடு ஆகுமா? இப்படிப் பலப்பல உண்டு.

இதற்குரிய தக்க பரிகாரம் கிடைக்காவிட்டால், மக்கள் மன்றத்தில் இத்தகைய ஒரு சார்பு நீதிப் போக்கைக் கண்டித்து, வெகுமக்கள் கண்டன கிளர்ச்சிகள் உருவாவது தவிர்க்க இயலாததாகும்! வழக்குரைஞர்களிடையே இப்பிரச்சினை கொதி நிலையாக இருப்பதைப் புரிந்து, உச்சநீதிமன்றத் தலைமையும், உயர்நீதிமன்றத் தலைமையும் கவனத்தில் எடுத்துக்கொண்டு, உடனடியாகத் தீர்வு காணவேண்டுகிறோம்! அப்போதுதான் நீதித் துறையின்மீது தற்போது ஆட்டங்கண்டுள்ள மக்களது நம்பிக்கை மீளும்!