Tamilnadu

21 ஆண்டுகளுக்கு பிறகு... சென்னையில் பிரமாண்டமாக நடந்து முடிந்த விமான சாகச நிகழ்ச்சி -குவியும் பாராட்டுகள்

இந்திய படைகளின் முக்கிய படையான விமானப்படை தொடங்கப்பட்டு 93-ம் ஆண்டு ஆகிறது. ஆண்டுதோறும் அக்டோபர் 08-ம் தேதி இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு விமானப்படை தினத்தை முன்னிட்டு, விமானப்படையின் சாகச நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

இன்று (அக்.06) காலை 11 மணி முதல் பகல் 01 மணி வரை சென்னை மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த நிகழ்வை காண மெரினாவில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குவிந்தனர். இந்த நிகழ்வை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி.-க்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த பிரம்மாண்ட விமான சாகச நிகழ்ச்சியில் இந்திய விமானப் படையின் சுகோய், தேஜஸ், ரஃபேல், ஜாகுவார் உள்ளிட்ட பல்வேறு வகையான 72 விமானங்கள் பங்கேற்றன. இந்த அனைத்து விமானங்களும் வானில் பறந்துகொண்டே இந்தியாவின் மூவர்ண நிற பொடியை வானில் தூவிக்கொண்டே சாகசங்களில் ஈடுபட்டன.

குறிப்பாக, வானில் லாவகமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து ஆச்சர்யப்படுத்தும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கை டைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஓன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபட்டு மெய்சிலிர்க்க வைக்கும் சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை பங்கேற்றன.

பல ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு அரசு அனைத்து ஒத்துழைப்புகளும் கொடுத்ததோடு, எந்த வித பிரச்னையும் இல்லமால் சுமூகமாக முடிக்கப்பட்டுள்ளது. வானெங்கும் விமானப்படையின் சாகசம் மக்கள் கண்ணுக்கு தெரிந்த வண்ணமாகவே இருந்தது. சென்னை முழுவதும் இதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

வரலாற்றில் முக்கிய விமான சாகச நிகழ்ச்சியாக சென்னையில் இன்று நடைபெற்ற இந்த நிகழ்ச்சி கருதப்படும். இதனை நேரில் கண்டுகளித்த பொதுமக்களில் பலரும் தாங்கள் முதல் முறை, அதுவும் நேரில் பார்த்தது மகிழ்ச்சி என்று தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தற்போது நிறைவடைந்துள்ள இந்த நிகழ்வை கண்ட அனைவரும் தங்கள் வாழ்வில் ஒரு மறக்க முடியாத அணுபவமாக இது இருப்பதாக கருதுகின்றனர்.

Also Read: விவசாயிகள் போராட்டம் : “பிரதமரின் உத்தரவாதம், உத்தரத்தில் தொங்கலாமா?” - பாஜக அரசுக்கு கி.வீரமணி கண்டனம் !