Tamilnadu

அது என்ன பள்ளிக் கூடமா? பா.ஜ.க பயிலரங்கமா? : ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் MP ஆவேச கேள்வி!

கல்வியில், RSS கொள்கைகளை புகுத்த ஒன்றிய பா.ஜ.க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படிதான் நீட் தேர்வை கொண்டு வந்து ஏழை எளிய மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்தது. புதிய தேசிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து, 3 ஆம் வகுப்பில் இருந்தே பொதுத் தேர்வு கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.

மேலும் புதிய கல்வி கொள்கையை ஏற்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. குளக்கல்வியை போதிக்கும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முடியாது என தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது.

இதனால் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டால்தான் சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதியை ஒதுக்க முடியும் என ஒன்றிய அரசு கூறி வருகிறது. தமிழ்நாட்டிற்கு தரவ வேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் இருந்து வருகிறது.

அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து சமக்ரசிக்க்ஷா திட்டத்திற்கான நிதியை உடனே வழங்க வேண்டும் என வலியுத்தினார். மேலும் புதிய கல்விக் கொள்கையை விட தமிழ்நாட்டின் கல்வி கொள்கை சிறப்பானது எனவும் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்நிலையில், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில், ஒரு தேசம் ஒரு தேர்தல், விக்‌ஷ்த் பாரத் போன்ற பா.ஜ.கவின் திட்டங்களை மாணவர்களிடையே போட்டியாக நடத்த வேண்டும் என ஒன்றிய அரசு சுற்றறிக்கைக்கு அனுப்பியுள்ளது.

இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அது என்ன பள்ளிக் கூடமா? பாஜக பயிலரங்கமா? என ஆவேசமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், “பட்டர் பன்னும் ஜி.எஸ்.டி பில்லும்” என்று தலைப்பு தருவார்களா?. அரசியல் சாசனத் திருத்தம் தேவைப்படும் பிரச்சினையை மாணவர்களிடம் திணிக்க அது என்ன பள்ளிக் கூடமா? பாஜக பயிலரங்கமா?” என கேள்வி எழுப்பி இருக்கிறார்.