Tamilnadu

நூதன திருட்டு: போலியான EMail அனுப்பி பணம் பறிப்பு... மோசடி கும்பல் குறித்து சைபர் போலீஸ் எச்சரிக்கை !

சைபர் குற்றவாளிகள், வணிக நிறுவனங்களின் வியாபாரம் தொடர்பான பணப்பரிமாற்ற மின்னஞ்சல் தகவல் தொடர்புகளை கண்காணித்து, அதனை இடைமறித்து, அந்த தகவல்களை கொண்டு மோசடியாக வணிக நிறுவனங்களிடமிருந்து பணம் பறித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள Agrigo Trading Private Limited கம்பெனியின் மேலாளருக்கு அவர் வணிகம் செய்து வரும் தெரிந்த நபரின் மின்னஞ்சல் போல உள்ள kunala@mail.com என்ற போலியான மின்னஞ்சல் முகவரியிலிருந்து நம்ப தகுந்த வகையில் அந்த கம்பெனி கோரிய பொருள்களுக்கான அடக்கவிலை பட்டியலுடன் மற்றும் செலுத்தவேண்டிய பணம் USD 238,500 (இந்திய மதிப்பில் ரூ 200,10,150) அமெரிக்காவில் உள்ள Regions Bank கணக்கிற்கு அனுப்பி வைக்குமாறும் போலியான மின்னஞ்சலை அனுப்பியுள்ளனர்.

அந்த மின்னஞ்சல் முன்னதாக பெறப்பட்ட மின்னஞ்சல்களுடன் தொடர்புடையதாக இருந்ததால் மேற்படி வணிக மேலாளர் உடனடியாக அந்த நிறுவனத்தின் வங்கி கணக்கு State Bank of India, Leather International Branch Chennai மூலம் 2809.2024 ம் தேதி பணத்தை அனுப்பியுள்ளார். 27.09.2024ம் தேதியன்று பணம் கிடைத்துவிட்டதா என பொருள் அனுப்பும் நிறுவனதுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது இந்த மின்னஞ்சல் மோசடி பற்றி தெரியவந்துள்ளது.

SCCIC S . 57/2024, u/s 318(4) of BNS 2023 & 66, 66C, 66D of IT Act 2000,ல் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மோசடி செய்யபட்ட தொகையைக் கண்டறிய சென்னையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, லெதர் இன்டர்நேஷனல் கிளைக்கு கடிதம் அனுப்பி அந்த பணம் அமெரிக்காவில் உள்ள Regions Bank கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதை பாரத ஸ்டேட் வங்கி மூலம் உறுதி செய்யப்பட்டது உடனடியாக சென்னை அசோக் நகரில் உள்ள தலைமையக சைபர் கிரைம் தனிப்படை குழு- 14C உள்துறை அமைச்சகம் மற்றும் Regions Bank USA ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு தீவிர முயற்சியின் அடிப்படையில் மோசடி செய்யபட்ட முழுத் தொகையும் மோசடியாளர்கள் எடுக்க முடியாதபடி வங்கி கணக்கில் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த பணமானது விரைவில் புகார்தாரருக்கு திரும்ப கிடைக்கவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கானது மின்னஞ்சலின் நம்பகத்தன்மையை சரிபார்க்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. குறிப்பாக அதிகப்படியான நிதி பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்டிருக்கும் போது இந்த வகையான மோசடிகள் இணைய குற்றவாளிகளால் நிகழ்த்தபடுகிறது. இதில் கவனக்குறைவாக இருந்தால் அது வணிகர்களுக்கு அதிக நிதி இழப்புகளை ஏற்படுத்தும்.

பொதுமக்கள் சைபர் குற்றங்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் இது போன்ற அழைப்புகளை கண்டு அஞ்சாமல் கணினிசார் குற்றப் பிரிவு அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். இது போன்ற அழைப்புகளை துண்டித்து விட்டு குறிப்பிடப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு அழைப்பவரின் அடையாளத்தை உறுதி செய்யவும்

தனிப்பட்ட தகவல்கள் மற்றும் நிதி சார்ந்த தகவல்களை அறிமுகமில்லாத நபர்களிடம் தொலைபேசியில் அளிக்காதீர்கள். மோசடி செய்பவர்கள் நமக்கு யோசிக்க நேரமளிக்காமல் அவசரமான சூழலில் இருப்பதாக நம்ப செய்வர். நம்பகமான நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து செயல்படவும்.

சைபர் மோசடிகள் மற்றும் அவர்களின் ஏமாற்றுத்தந்திரங்களை தொடர்ந்து அறிந்து வைத்திருங்கள். குற்றம் நடைபெறாமல் தடுக்க விழிப்புடன் இருப்பது முக்கியம். உங்கள் வங்கி மற்றும் கடனட்டை கணக்குகளில் அனுமதிக்கப்படாத பரிவர்த்தனைகள் ஏதும் உள்ளதா என தவறாமல் சரிபார்க்கவும்.

முக்கியமான கணக்குகளில் இரு காரணி பாதுகாப்பைப் பயன்படுத்தவும். மேலும் பொதுமக்கள் தங்களது வங்கிக்கணக்குகளை மற்றவர்கள் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் இது போன்ற கணக்குகள் நிதி மோசடிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகியிருந்தால், சைபர் கிரைம் கட்டணமில்லா உதவி எண் 1930 ஐ டயல் செய்து சம்பவத்தைப் புகாரளிக்கவும் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யவும்.

Also Read: சென்னை மக்கள் கவனத்திற்கு - நாளை போக்குவரத்து மாற்றம் : முழு விவரம் இதோ!