Tamilnadu

கீழடி அகழாய்வு தளம் ஆவணம்! : ஹெலிகாம் டிரோனில் பதிவு செய்யும் பணி தொடக்கம்!

தமிழர்களின் பெருமைகளை உலக அரங்கில் எடுத்துரைக்கும் வகையில், இந்தியாவின் சிறந்த பாரம்பரிய சுற்றுலாத் தளமாக ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் தனியார் நிலத்தில் கடந்த ஜூன் 18ம் நாள் தொடங்கியது.

இதுவரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு அதில் இருந்து பாசிகள், கண்ணாடி மணிகள், தந்த ஆட்டக்காய், சுடுமண் குழாய், பானைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. வழக்கமாக ஜனவரியில் தொடங்கி செப்டம்பரில் பணிகள் நிறைவடையும் நிலையில், நடப்பாண்டில் பணிகள் தாமதாமாகியுள்ளன.

அகழாய்வு குழிகளில் உள்ள பானைகள், பானைஓடுகள், சரிந்த கூரை ஓடுகள், சுடுமண் குழாய்கள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட அனைத்தையும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இனி மழை காலம் தொடங்க இருப்பதால் இதுவரை நடந்த பணிகளை ஆவணப்படுத்த தொல்லியல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஹெலிகேமரா மூலம் அகழாய்வு தளத்தையும் அதில் உள்ள பொருட்களையும் பதிவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு கட்ட அகழாய்வின் இறுதியில் தளத்தை சுத்தம் செய்து விடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்வார்கள்.

அவ்வகையில், கீழடி அகழாய்வு குறித்த ஆவணப்படங்கள் தயாரிக்கவும் தொல்லியல் துறைக்கு ஆவணமாகவும் பயன்படுத்தவும் படங்கள் பதிவு செய்யப்படுகின்றன. ஒவ்வொரு குழியிலும் மண்அடுக்குகள் வரிசைப்படுத்தப்பட்டு படங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இரண்டு நாட்கள் இப்பணிகள் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: இடைத்தேர்தல் செலவுக்காக ரூ. 50 கோடி கேட்டு மிரட்டல்! : ஒன்றிய அமைச்சர் குமாரசாமி மீது வழக்குப்பதிவு!