Tamilnadu

பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்த அரசு பள்ளி மாணவன் : ஆலோசனை கேட்ட அமைச்சர் அன்பில் மகேஸ்!

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட சக்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் செந்தில். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு அபிஷேக் என்ற மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

இந்நிலையில் அபிஷேக் பெத்தநாய்க்கன் பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் அபிஷேக் தினமும் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிக்கு தினமும் மிதிவண்டியில் சென்றுவர 45 நிமிடம் செலவாகிறது.

இதனால் சில நேரம் பள்ளிக்கு குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இதையடுத்து, பேட்டரி மூலம் தனது பழயை மதிவண்டியை இயக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். இதற்காக மாணவன் அபிஷேக் கடந்த ஒராண்டாகவே,இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

தற்போது, அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.2800 ஆர்.பி.எம். வேக மோட்டார் பொருத்தப்பட்டு, அதில் 30 கி. மீட்டர் வேக திறன் கொண்ட பேட்டரி மூலம் மிதி வண்டியை அபிஷேக் வடிவமைத்து மாணவர் சாதனை படைத்துள்ளார். 45 நிமிடத்தில் பள்ளிக்கு சென்று வந்த அவர் தற்போது,15 நிமிடத்தில் சென்று வருகிறார்.

இந்நிலையில், பேட்டரியால் இயங்கும் மிதிவண்டியை வடிவமைத்த மாணவன் அபிஷேக்குக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ”உங்களது கண்டுபிடிப்புக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் தம்பி. உங்கள் செய்தியை பார்த்து முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். இதுபோன்று இன்னும் பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடியுங்கள்.

உங்களுடன் நாங்கள் இருக்கிறோம். அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக ஆலோசனைகள் இருந்தா சொலுங்க, நாம அதை நிறைவேற்றலாம். உங்களைபோன்ற மாணவர்கள்தான் நமக்கு தேவை. உங்களால் அரசு பள்ளிக்கு பெருமை.” என தெரிவித்துள்ளார்.

மேலும் சமூகவலைதளத்தில், அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழும் மாணவர் அபிஷேக் முயற்சிக்கு வாழ்த்துகள். தொடர்ந்து சாதனைகள் படைப்போம். அரசுப் பள்ளி என்பது பெருமையின் அடையாளம் என்பதை நிரூபிப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: மக்களுக்கான தூய்மை பணியாளர்கள் : தவற விட்ட ரூ.25 ஆயிரம் உரிமையாளரிடம் ஒப்படைப்பு!