Tamilnadu

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு தயார் : அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சொல்வது என்ன?

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள நில அளவைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் புதிய உட்கட்டமைப்பு வசதிகளை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் திறந்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், " நமது முதலமைச்சர் அவர்கள் வருவாய் துறையில் பட்டா வழங்கும் பணியையும், சர்வே செய்யும் பணியையும் விரைவு படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில்தான் இந்த மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மையத்தை தொடங்கி உள்ளோம். ஏற்கனவே இங்கு 50 பேர் பயிற்சி எடுத்துக் கொள்ளும் வகையில் இருந்தது, இப்போது கூடுதலாக 50 பேர் பயிற்சி பெற முடியும். ஒருவருக்கு 8 மாதங்கள் பயிற்சி இருக்கும்.

உங்களை தேடி முதலமைச்சர் என்ற பெயரில் முகாம் நடத்தப்பட்டு , வரும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. பிரச்சனை இல்லாமல் இருந்தால் உடனடியாக பட்டா வழங்கப்படும்.

வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிக மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நானும், துறை செயலாளர்களும் அந்த பணியில் கவனமாக உள்ளோம். கடந்த முறை வடகிழக்கு பருவமழை எந்த பகுதிகளில் பாதிப்பை அதிகம் ஏற்படுத்தி இருந்ததை கவனித்து செயல்பட்டு வருகிறோம்.

சென்னையில் அதிகமாக மழைநீர் தேங்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்போதே படகுகள் அனுப்பிவைக்கப்பட்டு வருகிறது. மேலும் உணவு பொருட்களும் சேமித்து வைக்கப்பட்டு வருகிறது. அதேபோடு பிற மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மூலம் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

பாதிப்பு இருக்கும் பகுதிகளுக்கு மீட்பு படைகளை அனுப்ப தயாராக உள்ளோம். நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணிக்க நீர்வளத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து வகையிலும் அரசு தயார் நிலையில் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “புத்தக வாசிப்பால் உலகத்தையே கைகளுக்குள் கொண்டு வரமுடியும்” : கனிமொழி எம்.பி பேச்சு!