Tamilnadu
ஈசா யோகா மையத்தில் 2ஆவது நாளாக விசாரணை!
கோவை, வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்து உள்ள ஈசா யோகா மையத்தில் தங்கி உள்ள தனது இரு மகள்களை மீட்டுத் தர கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணையில், ஈசா மீதான வழக்குகள், வழக்குகளின் விவரம், மகள்கள் கட்டாயத்தின் பேரில் யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர் என காமராஜ் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தி 4 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதை அடுத்து, ஈசா யோகா மையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல் துறையினர், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் நல குழுவினர் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரடியாக விசாரணை மேற்கொண்டனர்.
ஈசா யோகா மையத்தில் தங்கி உள்ள துறவிகள், தன்னார்வலர்கள், பணியாளர்கள், அலுவலர்கள், பள்ளியில் என அனைத்து வகைகளிலும் பல்வேறு கோணங்களில் குழுக்களாக பிரிந்து விசாரணை நடத்தப்பட்டு உள்ளது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 6 குழுக்களாக பிரிந்து 70 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்று வருகிறது. முக்கியமான இந்த விசாரணைக்கு காரணமான வழக்கு தாக்கல் செய்த காமராஜின் இரு மகள்களான லதா, கீதா மட்டுமின்றி பெண் துறவிகள் , பெண் தன்னார்வலர்களிடம் பொள்ளாச்சி உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ருஷ்டி சிங், ஈசா யோகா மையத்தில் உள்ள பெண் துறைவிகளிடம் தனித் தனியாக விசாரணை மேற்கொண்டு உள்ளார்.
இது தவிர குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., பேரூர் டி.எஸ்.பி., ஆலந்துறை, பேரூர், தொண்டாமுத்தூர், காருண்யா நகர் காவல் நிலைய ஆய்வாளர்கள், காவல் துறையினர் என 200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புடன் விசாரணை நடைபெற்றது.
ஒவ்வொருவரிடமும் சுய விவரங்கள், சுய விருப்பத்தின் பேரில் தங்கி உள்ளனரா? அவரவர் அடையாள அட்டைகளின் உண்மை தன்மை என தனித் தனியாக விசாரணையானது எழுத்து பூர்வமாக மட்டுமின்றி காணொளி மூலமும் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 12 க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தவர்கள் நேற்று காலை 10.30 மணிக்கு துவங்கி இரவு 7.30 மணி வரை என 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,
இன்றும் விசாரணை தொடரும் எனவும், அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஈசா யோகா மையத்தில் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாகவும், காவல் துறையுடன், மாவட்ட சமூக நலத்துறை , குழந்தை நல குழு ஆகியோரும் விசாரணையில் ஈடுபட்டதாக கூறியவர், விசாரணைக்கு ஈசா முழு ஓத்துழைப்பு வழங்கி உள்ளதாகவும், துறவிகள் உள்ளிட்ட அனைவர் இடத்திலும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக கூறினார். 4 ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும், நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் விசாரணை விவரங்களை தெரிவிக்க இயலாது என்றார்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!