Tamilnadu

“அதிமுகவினர் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை...” - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பதிலடி!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த அண்ணாமலை நகரில் ரூ.1 கோடியே 10 லட்சத்தில் பேரூராட்சி அலுவலக கட்டிடம் கட்டப்பட்டது. இதை கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

மேலும் வல்லம்படுகையில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தையும், தண்டேஸ்வரநல்லூர், வில்லியநல்லூர், சி.புதுப்பேட்டை ஆகிய மூன்று இடங்களில் சுமார் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார மையத்தையும் என ரூ.3 கோடியே 54 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று முடிந்த பணிகளின் கட்டிடங்களை மக்கள் பயன்பாட்டிற்காக இன்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் பேசியதாவது, “அரசின் திட்டங்களை செயல்படுத்துகின்ற வகையில் சமுதாயக்கூடங்கள், பேரூராட்சி அலுவலக கட்டிடம், ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கிராமங்களின் தேவைகளை அறிந்து கட்டிடங்களாகவும், சாலைகளாகவும் செய்யப்பட்டு வருகிறது.

உதயநிதி துணை முதலமைச்சராவது ஒரு பேசும் பொருளாக வாய்ப்பில்லை. அதிமுக கட்சி நடத்த வேண்டும் என்பதற்காக ஏதாவது சொல்கிறார்கள். அதிமுக ஆட்சியில் எந்த அடிப்படையில் துணை முதலமைச்சர் பதவியை ஓபிஎஸ் வகித்தார்.

அதிமுக ஆட்சியில், முதலில் ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்தார். அதன் பிறகு துணை முதலமைச்சராக இருந்தார். ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆகியோர் பேனரில்தான் வருகிறார்கள். அதிமுகவில் எந்த அடிப்படையில் ஓபிஎஸ் துணை முதல்வராக இருந்தார்? ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சுயமாக உதயநிதி வளர்ந்து கொண்டிருக்கிறார். உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கும் அளவிற்கு அவருடைய செயல்பாடுகள் தேர்தல், கட்சி போன்றவற்றில் முழுமையாக உழைத்து இந்த பதவிக்கு வந்திருக்கிறார்.

அதனால் அவர் துணை முதலமைச்சராக ஆவதற்கு தகுதிகள் உள்ளது. அதை அதிமுக ஏற்க வேண்டிய அவசியமில்லை. திராவிட முன்னேற்ற கழகத்தினர் நாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கிறோம். எடப்பாடி பழனிசாமி ஏற்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஏனென்றால் இது திமுக ஆட்சி. இதுபோன்ற சிண்டு முடிகின்ற வேலைகள் வேண்டாம்.

நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் செய்து 40க்கு 40 வெற்றி பெற்றதற்கு உதயநிதி முக்கிய காரணம். அந்த உழைப்பிற்காகத்தான் இன்று துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.

உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை தேர்தல் ஆணையம்தான் நடவடிக்கை எடுக்கும். முறைப்படி தேர்தல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதிமுகவில் கோஷ்டி பூசல் இருக்கிறது. அதனால் திமுகவை பற்றி குறை கூறுகிறார்கள். கிராமத்தில் நடைபெறும் சிறிய பிரச்னை கூட பெரிது படுத்தப்படுகிறது. காவல்துறை உடனுக்குடன் சட்டமன்ற உரிய நடவடிக்கை எடுக்கிறார்கள். தமிழகத்தில் குற்றங்கள் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கஞ்சா போதைப் பொருள்கள் பிடிக்கப்படவில்லை. ஆனால் தற்போது போலீசார் கஞ்சாவை பிடிக்கிறார்கள். அதனால் செய்திகள் வெளியாகிறது. நாங்களும் பிடிக்காமல் இருந்தால் செய்திகள் வெளியாகாது. கொரோனா காலத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்தாததால்தான் இன்றைக்கு இந்த அளவுக்கு வளர்ந்து நிற்கிறது. கிராமப்புற அளவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் திமுக அரசின் திட்டங்கள் உள்ளது.” என்றார்.

Also Read: முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி! : இந்தியாவின் புது முயற்சியை தொடங்கிவைத்தார் அமைச்சர் மா.சு !