Tamilnadu

முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி! : இந்தியாவின் புது முயற்சியை தொடங்கிவைத்தார் அமைச்சர் மா.சு !

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவ மையத்தில் சர்வதேச முதியோர் நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் 36 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்குட்பட்ட 975 இடங்களில் முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

இந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் பயிற்சி வகுப்பு 3 மாதம் நடத்தப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும், கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் சர்வதேச முதியோர் நாளை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்லாங்குழி, கேரம், பாடல்களை கண்டறிதல், தினசரி வாசிப்பு போட்டிகளில் வெற்றி பெற்ற முதியோர்களுக்கு அமைச்சர் பரிசுகளையும் வழங்கி சிறப்பித்தார்.

விழா மேடையில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்,

“இன்று சர்வதேச முதியோர் நாள், உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது, முதியோர் என்பதற்கு வயது வரம்பு என்று ஒரு நாடும் இதுவரை குறித்ததில்லை.

இந்தியாவில் 60 வயதை தாண்டிய முதியோர்களுக்கு சிறப்பு மருத்துவமனை என்று எந்த மாநிலத்திலும் இல்லை. தமிழ்நாடு மற்றும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் முதியோர்களுக்கான மருத்துவமனை உள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு மாடியில் முதியோர் மருத்துவமனையை இயக்கி வருகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் கலைஞர் எட்டரை ஏக்கர் நிலத்தை கொடுத்தார், மேலும் முதியோர்கான சிறப்பு மருத்துவமனை அமைப்பதற்கு மருத்துவ நிர்வாகத்தில் 225 பணியிடங்களைக் கொண்ட மருத்துவமனை வருவதற்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருந்துள்ளது.

இந்தியாவில் தற்போது முதியோருக்கான சிறப்பு மருத்துவமனை என்றால் தமிழ்நாட்டில் உள்ள இந்த மருத்துவமனை தான். இந்த மருத்துவமனை தமிழ்நாடு வரலாற்றில் மிகப்பெரிய அளவில் மகிழ்ச்சி அடைய வேண்டிய செய்தியாகும்.

இந்த மருத்துவமனையில் ஒரு லட்சத்து பதினோராயிரம் புற நோயாளிகள் சிகிச்சைப் பெற்று இருக்கின்றனர். உலக அளவில் எந்த நாட்டிலும் முதியோர் சேவை பராமரிப்பு உதவியாளர் என்ற பிரிவு எங்கேயும் இல்லை.

இன்று பலர் ஏராளமான தாய் தந்தையரை விடுதிகளில் முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்கள், மீதமுள்ள முதியோரை வீட்டில் கவனித்துக் கொள்ள தனியார் அமைப்பு மூலம் உதவியாளரை வீட்டில் அழைத்து வருகிறார்கள். அது ஒரு தொழிலாகவே இன்று நடந்து கொண்டிருக்கிறது, ஒரு கட்டுப்பாடற்ற நிலையில் பெரிய ஊதியத்தில் சம்பந்தப்பட்ட இடத்தில் பெற்றுக் கொள்வதும் பராமரிப்பு செய்பவர்களுக்கு குறைத்து தருகிறார்கள்.

பாடத்தைப் படிக்க கூடியவர்கள் ஒரு ரூபாயை கூட செலுத்த வேண்டாம், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து முடித்து இருந்தால் போதும், இந்த மருத்துவமனை பகுதியை சுற்றி இருக்க வேண்டும்.

இந்தியாவில் 15 கோடி முதியோர்கள் உள்ளனர், தமிழ்நாட்டில் 13.7 சதவீத முதியவர்கள் உள்ளனர், இதில் 10 லிருந்து 13 சதவீத முதியோர்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகிறார்கள்” என்றார்.

Also Read: தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் இனியும் தொடரும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!