Tamilnadu

“அனைத்து துறைகளிலும் சாதனை... இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது தமிழ்நாடு” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு பொன் விழாவை சிறப்பித்திடும் வகையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் டாக்டர் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தினை அறிவித்து இத்திட்டம் மதுரை மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக இன்று (01.10.2024) விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு    மருத்துவ   கல்லூரி    கலையரங்கத்தில் 450 ஊராட்சிகளுக்கு 564 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பையும், முதலமைச்சர் கோப்பை 2024 போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளையும் வழங்கி, பல்வேறு துறைகளின் சார்பில் ரூ.67.48 இலட்சம் மதிப்பில்  நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காணொலிக் காட்சி வாயிலாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 ஊராட்சிகளுக்கு 478 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, தென்காசி மாவட்டத்தில் உள்ள 221 ஊராட்சிகளுக்கு 338 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 204 ஊராட்சிகளுக்கு 300 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 95 ஊராட்சிகளுக்கு 183 கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்பு என மொத்தம்  923  ஊராட்சிகளுக்கு 1299  கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் தொகுப்புகளை வழங்கிடும் பணிகளை காணொலிக் காட்சி வாயிலாக  தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் பேசியதாவது,   

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின்கீழ், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஊராட்சி மன்றங்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன். இன்றைக்கு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் எனக்கு கூடுதல் பெருமை, கூடுதல் மகிழ்ச்சி என்றால், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்னை தமிழ்நாட்டு துணை முதலமைச்சராக நியமித்த பிறகு, நேற்று சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன், சென்னைக்கு வெளியே நான் கலந்து கொள்கின்ற முதல் அரசு நிகழ்ச்சி, இந்த நிகழ்ச்சி. துணை முதலமைச்சராக நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக நான் கலந்து கொள்கின்ற முதல் நிகழ்ச்சியும் இந்த நிகழ்ச்சி தான்.

அது மட்டுமல்ல, விளையாட்டு உபகரணங்கள் மட்டுமல்ல, மாற்றுத் திறனாளிகள் 100 பேருக்கு மோட்டார் வாகனம், 2000 மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது என்பது இந்த நிகழ்ச்சிக்கு கூடுதல் பெருமை. கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை மதுரையில் இந்த வருடம், கடந்த பிப்ரவரி மாதம் அன்று தொடங்கி வைத்தோம். தமிழ்நாட்டில் உள்ள 12525 கிராம பஞ்சாயத்துகளுக்கும் ரூபாய் 86 கோடி மதிப்பீட்டில் விளையாட்டு உபகரணங்களை தொடர்ந்து வழங்க இருக்கின்றோம். இதுவரை தமிழ்நாடு முழுக்க 18 மாவட்டங்களில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

தென்மாவட்டங்கள் என்றாலே, அது வீரத்திற்கு பெயர் போன மாவட்டங்கள். வீரத்தில் மட்டுமல்ல, வீர விளையாட்டுக்களிலும் தலைச்சிறந்த மாவட்டங்கள். குறிப்பாக விருதுநகர், கோவில்பட்டி, பாளையங்கோட்டை போன்ற ஊர்களில் இருந்து ஏராளமான திறமைமிகு விளையாட்டு வீரர்கள் உருவாகி இருக்கிறார்கள், உருவாக்கிட்டு வருகிறார்கள். நம்முடைய விளையாட்டு மேம்பாட்டுத்துறை மூலமாக நடத்தப்படுகின்ற முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப்போட்டிகள் தமிழ்நாட்டில் விளையாட்டினை ஒரு மாபெரும் இயக்கமாகவே மாற்றி வருகின்றது.

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கான இந்த வருடம் ரூபாய் 80 கோடி நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒதுக்கி, 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. ஐந்து பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்று வருகிறார்கள். சென்ற ஆண்டு, இந்த முதலமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொண்டவர்கள் 6,71,000 பேர். இந்தாண்டு முதலமைச்சர் கோப்பை போட்டியில் கலந்து கொண்டவர்கள் 11.56,000 பேர். இதுவே, இந்த போட்டியின் வெற்றியை பற்றி உங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

தமிழ்நாட்டு பட்டி தொட்டிகளில் இருந்து தலைச்சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தோடுதான் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு கோப்பைக்கான பரிசுத் தொகையை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உயர்த்தி, இந்த முறை பரிசுத் தொகை மட்டும் ரூ.37 கோடியாக உயர்த்தி அளித்திருக்கிறார்கள். இந்த ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் மாவட்ட அளவில் வென்றவர்களுக்கு பரிசுகளை உங்கள் முன்பு வழங்கி இருக்கின்றோம். அவர்களுக்கு இந்த நேரத்தில் எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த நிகழ்ச்சியில் கூட நிறைய விளையாட்டுத் துறை சாதனையாளர்கள் வந்திருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த பென்சிங் வீரர் தம்பி ஜிஷோநிதி வருகை தந்து இருக்கிறார். தம்பி ஜிஷோநிதி லண்டனில் நடைபெற்ற காமன்வெல்த் பென்சிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று வெண்கலப் பதக்கம் வென்றவர். குஜராத், பஞ்சாப், கோவா, அஸ்ஸாம் மாநிலங்களில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிகளில் நான்கு முறை தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்து இருக்கின்றார். கடந்த மூன்று வருடத்தில் மட்டும் ஏழு தங்கப்பதக்கம், இரண்டு வெள்ளிப்பதக்கம், இரண்டு வெண்கலப்பதக்கம் வென்று நம்முடைய தமிழ்நாட்டிற்கு பெருமை தேடித்தந்த ஒரு அருமை சகோதரர்.

  இன்றைக்கு எல்லாத்தையும் விட இன்றைக்கு இந்திய ராணுவத்துல நாட்டை காக்கின்ற பணியை அவர் செய்து வருகின்றார். இப்படி பலருக்கும் முன்மாதிரியாக திகழும் அவருக்கு நாம் அனைவரும் நம்முடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வோம். அதே போல, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கூடைப்பந்து வீராங்கனை தங்கை சுந்தரி, இங்கே வருகை தந்து இருக்கிறார். 38வது தேசிய இளையோர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப்பில் தங்கப்பதக்கம் வென்று தமிழ்நாடு அணியில் இடம் பெற்றவர் தான் சகோதரி.

விளையாட்டுத் துறையில் சாதிக்க துடிக்கும் மகளிருக்கு ஊக்கமளிக்கின்ற வகையில் சாதனைகளை படைத்து வரும் அவருக்கு நாம் அனைவரும் நம்முடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வோம். இந்த இரண்டு பேர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு வீரர், வீராங்கனைகள் உலக அளவில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து படைத்துகிட்டு வருகிறார்கள்.

சில நாட்களுக்கு முன்பு, ஹங்கேரியில் நடந்த 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி, உங்களுக்கு ஞாபகம் இருக்கும், 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை இரண்டு வருடங்களுக்கு முன்பே சென்னையில் முதல் முறையாக வெற்றிகரமாக நடத்திக் காட்டினோம். இந்த முறை இந்த ஆண்டு 45ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் குழு தங்கப் பதக்கங்களை வென்றது.

தங்கப் பதக்கத்தை வென்ற இந்திய செஸ் அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் தம்பி குகேஷ், தம்பி பிரக்ஞானந்தா, சகோதரர் ஸ்ரீநாத் நாராயணன், தங்கை வைஷாலி ஆகியோர் இடம்பெற்று சிறப்பான பங்களிப்பை வழங்கினார்கள். அவர்களுக்கு நம்ம முதலமைச்சர் அவர்கள் மொத்தம் ரூ.90 லட்சம் உயரிய ஊக்கத்தொகையாக வழங்கி அவங்களை ஊக்கப்படுத்தினார்கள். அதே போல, இந்த வருடம் பாரிஸில் நடந்த பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர்களை அனுப்பி வைத்தோம்.

அந்த 6 வீரர்களுக்கும் போட்டிக்கு போவதற்கு முன்பாகவே ஊக்கத் தொகையாக முதலமைச்சர் அவர்கள் ரூ.7 லட்சம் வழங்கி ஊக்கத்தொகையாக அனுப்பி வைத்தார்கள். சென்ற ஆறு பேரில், நான்கு பேர் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்கள்.அந்த 4 பேருக்கும் மொத்தம் ரூபாய் 5 கோடி அளவுக்கு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் பரிசுத் தொகையை வழங்கினார். இந்த மூன்று வருடங்கள் மட்டும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கிட்டதட்ட 1,300 விளையாட்டு வீரர்களுக்கு ரூபாய் 38 கோடி அளவிற்கு உயரிய ஊக்கத்தொகையை வழங்கி இருக்கிறார்கள்.

அதேபோல், அரசு மற்றும் அரசு பொதுத்துறை நிறுவனங்களில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துக்கொண்டு இருந்தார்கள். கழக அரசு அமைந்த பிறகு, நம்முடைய முதலமைச்சர் சீரிய நடவடிக்கையின் பேரில் முதல் கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணி வழங்க இருக்கிறோம் என்பதை இந்த நேரத்திலே மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கின்றேன். 

ஏழை, எளிய மாற்றுத்திறன் கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு உதவுவதற்காக தான் நம்முடைய முதலமைச்சர் முன்னெடுப்பில் துவங்கி வைக்கப்பட்ட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் தொடர்ந்து பல உதவிகளை செய்துகொண்டு வருகிறோம்.

இந்த அறக்கட்டளை மூலம் உதவி பெற விரும்புவோர் யாராக இருந்தாலும் TNCF இணையதளத்தில் சென்று விண்ணப்பித்தால் போதும். உடனே, அதை பரிசீலனை செய்து, உதவித் தொகை உடனுக்குடன் வழங்கப்படுகின்றது. சமீபத்தில், நீங்க பாத்துருப்பீங்க, தெற்கு ஆசியாவிலேயே முதன் முறையாக Formula 4 இரவு நேர கார் பந்தயத்தை சென்னையில கடந்த மாதம் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம்.

கடந்த ஜனவரி மாதம் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகளை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக நாம் நடத்தி காட்டினோம். அந்த கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் தமிழ்நாடு முதன்முறையாக இண்டாவது இடத்தை தமிழ்நாடு பிடித்தது. விளையாட்டுத் துறையில் மட்டுமல்ல, நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய பல்வேறு துறைகளிலும் இன்றைக்கு மகத்தான சாதனைகளை படைத்து வருகின்றது.

வறுமை ஒழிப்பு, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, மகளிர் நலன் உள்ளிட்ட 13 துறைகளில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கின்றது என்று நான் சொல்லவில்லை. ஒன்றிய அரசினுடைய நிதி ஆயோக் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்ல, நேற்றைய தினம் ஒரு செய்தி வந்தது, ஒன்றிய அரசினுடைய புள்ளியியல் துறை (Statistics Department) சார்பில் ஒரு புள்ளிவிவரம் கொடுத்திருக்கிறார்கள். இந்தியாவிலே அதிக தொழிற்சாலைகளை கொண்ட மாநிலம் தமிழ்நாடுதான் என்றும், இந்தியாவிலேயே அதிக அளவிலான வேலைவாய்ப்பினை தரக்கூடிய மாநிலங்கள் தமிழ்நாடு தான் என்று அந்த புள்ளியியல் துறை தெரிவிக்கின்றது. 

இப்படி எல்லா துறைகளிலும் தமிழ்நாடு இந்தியாவிற்கே வழிகாட்டி கொண்டிருக்கிறது என்பதை இங்கே நான் பெருமையோடு தெரிவித்துக்கொள்கின்றேன். இன்றைக்கு கிராமப்புறங்களிலிருந்து நிறைய விளையாட்டுத் துறை திறமையாளர்கள் வர வேண்டும் என்ற அந்த அடிப்படையில் தான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளோம்.

முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும் விளையாட்டுத் துறையின் சார்பாக முதல் முறையாக கலைஞர் பெயரில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால், அது இந்த கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் மட்டும் தான். நீங்க யோசிக்கலாம், இந்த திட்டத்திற்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம் என்று ஏன் பெயர் வைத்தார்கள் என்றால், ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்கக் கூடிய அத்தனை குணங்களும், திறமைகளும் கலைஞரிடம் இருந்தது. அவரு ஒரு ஆல் ரவுண்டர். அதனால் தான், இந்த திட்டத்துக்கு அவரோட பெயரை சூட்டினோம். எப்போதும் யாராலயும் வீழ்த்த முடியாத ஒரு அரசியல் வீரனாக கலைஞர் அவர்கள் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் திகழ்ந்தார். எனவே கலைஞர் பெயரால் இந்த விளையாட்டு உபகரணங்கள் இன்று வழங்கப்படுகின்றன.

இவற்றை பெறக்கூடிய விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் கலைஞர் அவர்களுக்கு இருந்த அத்தனை குணங்களையும், திறமைகளையும் நீங்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நான் ஆசைப்படுகின்றேன். இன்று கலைஞர் விளையாட்டு உபகரணங்களைப் பெற வந்துள்ள அத்தனை ஊராட்சிகளுக்கும், அந்த ஊராட்சியின் முகங்களான, மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று மாவட்ட அளவில் வென்ற பரிசுகளை பெறவுள்ள வீரர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்களுக்கு, நம்முடைய திராவிட மாடல் அரசு என்றும் துணைநிற்கும் என்று கூறி வாய்ப்புக்கு நன்றி கூறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Also Read: தமிழ்நாடு விளையாட்டு துறையின் சாதனைகள் இனியும் தொடரும் : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!