Tamilnadu

நானே உங்களை நேரில் சந்திக்க வருகிறேன் : உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை அடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை மாற்றத்திற்கு நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள், தி.மு.க தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் உடன் பிறப்புகள் துணை முதலமைச்சரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், நானே உங்களை நேரில் சந்திக்க வருகிறேன் என உடன்பிறப்புகளுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள், என்னை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சென்னைக்கு வருகிறீர்கள். உங்களுடைய அன்பு என்னை நெகிழச் செய்கிறது. அதற்கு என்றும் நன்றிக்குரியவனாக நான் இருப்பேன்.

எனினும், நம் கழகத்தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கட்டளையின்படி, அவரவர் பகுதிகளில் நாம் செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. எனவே, மக்கள் பணி – கழகப்பணியில் தொடர்ந்து கவனம் செலுத்துவோம்.

என்னைச் சந்திப்பதற்காகச் சென்னைக்குப் பயணம் செய்வதைக் கழக உடன் பிறப்புகள் தவிர்க்குமாறு அன்போடும் – உரிமையோடும் கேட்டுக் கொள்கிறேன். பல்வேறு மாவட்டங்களில் நான் அடுத்தடுத்துச் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், நானே உங்களை அங்கே நேரில் சந்தித்து உங்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்..” - துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கனிமொழி MP வாழ்த்து!