Tamilnadu
உயிர்காக்கும் சேவையில் பங்கெடுப்போம் : தேசிய தன்னார்வ இரத்ததான நாளையொட்டி முதலமைச்சர் வாழ்த்து!
ஒருவருக்கு இரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், மொழிப் பாகுபாடின்றி வாழ்வளிக்க மனித நேயத்தோடு தன்னார்வ இரத்ததானம் செய்திட முன்வருபவர்களை உளமாற பாராட்டுகிறேன். மேலும், பொதுமக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டும் என தேசிய தன்னார்வ இரத்ததான நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
நவீன சுகாதார பாதுகாப்பு அமைப்பில், இரத்தம் தேவைப்படும் நபருக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இரத்தம் அளிப்பது மனித நேயமிக்க உயிர்காக்கும் செயலாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் வகையில், ஒவ்வோராண்டும் அக்டோபர் திங்கள் முதல் நாள் தேசிய தன்னார்வ இரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது. இவ்வாண்டிற்கான தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தின் கருப்பொருள் “இரத்த நன்கொடையின் 20 ஆம் ஆண்டு கொண்டாட்டம். இரத்தக் கொடையாளர் அனைவருக்கும் நன்றிகள்” என்பதாகும்.
தன்னார்வ இரத்ததானத்தின் முக்கியத்துவத்தை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், ஊர்வலங்கள், இரத்ததான முகாம்கள் மற்றும் ஊக்குவிப்பு நிகழ்ச்சிகளை தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் செய்துவருகிறது.
இரத்தம் என்பது நம் உடலில் ஓடக்கூடிய உயிர்காக்கும் திரவமாகும். நம் நுரையீரலில் இருந்து நாம் உயிர் வாழ்வதற்குத் தேவையான ஆக்சிஜனை உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச்செல்வதோடு, உடலிலுள்ள கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.
நம் ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் 5 லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்ததானம் செய்ய 20 நிமிடங்கள்தான் ஆகும். இந்த இரத்ததானத்தின்போது 350 மி.லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆரோக்கியமான ஆண் 3 மாதத்திற்கு ஒரு முறையும், பெண் 4 மாதத்திற்கு ஒரு முறையும் இரத்ததானம் செய்யலாம். இரத்ததானம் செய்தவுடன் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். தானமாக பெறப்படும் ஓர் அலகு இரத்தம் நான்கு உயிர்களைக் காப்பாற்றும். இரத்த தானம் செய்தால் உடலில் புதிய செல்கள் உருவாகி தானம் செய்வோரின் உடல் நலனும் காக்கப்படுகிறது என்று மருத்துவர்கள் எடுத்துரைக்கிறார்கள். எனவே, அடுத்தவர் உயிர்காக்கும் இரத்ததானத்தினைத் தவறாது செய்வோம்.
தமிழ்நாட்டில் இதற்கென 107 அரசு இரத்த மையங்களும், 247 தனியார் இரத்த மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இரத்த மையங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக e-RaktKosh என்ற வலைதளம் செயல்பாட்டில் உள்ளது. இத்தளத்தில் இரத்ததான முகாம் மற்றும் இரத்த கொடையாளர்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம், அதில் இரத்த வகைகளின் இருப்பைத் தெரிந்துக் கொள்ளும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பொதுமக்கள் இத்தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவைப்படும் நேரங்களில் எளிதில் இரத்தம் பெற்றுக்கொள்ளலாம்.
ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசு இரத்த கொடையாளர்கள் மற்றும் இரத்ததான முகாம் அமைப்பாளர்களை அரசு சார்பில் பாராட்டிச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கிச் சிறப்பித்து வருகிறது.
கடந்த ஆண்டு அரசு இரத்த மையங்கள் வாயிலாக, இலக்கிற்கு மேல் 102 விழுக்காடு இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் இரத்தமானது அரசு மருத்துவமனைகளில் தேவைப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. ஒருவருக்கு இரத்தம் தேவைப்படும்போது இனம், மதம், மொழிப் பாகுபாடின்றி வாழ்வளிக்க மனித நேயத்தோடு தன்னார்வ இரத்ததானம் செய்திட முன்வருபவர்களை உளமாற பாராட்டுகிறேன், மேலும், பொதுமக்களின் உயிர்காக்கும் சேவையில் நாம் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென்றும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!