Tamilnadu
“மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும்..” - துணை முதலமைச்சர் உதயநிதிக்கு கனிமொழி MP வாழ்த்து!
தமிழ்நாடு அமைச்சரவையை மாற்றியமைக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை அடுத்து, ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சரவை மாற்றத்திற்கு நேற்று (செப்.28) ஒப்புதல் அளித்தார். அதன்படி விளையாட்டுத்துறை அமைச்சராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சி துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் சில அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டும், கூடுதலாக செந்தில் பாலாஜி, கோவி செழியன், நாசர், ராஜேந்திரன் ஆகியோரும் புதிதாக அமைச்சர்களாக நியமிக்கப்பட்டும் இன்று ஆளுநர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து அனைவருக்கும் அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கனிமொழி எம்.பி., துணை முதல்வராக பதவியேற்கும் உதயநிதி ஸ்டாலின் மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூரில் எழுத்தாளர் புதுவை இளவேனில் எழுதிய "நிச்சலனத்தின் நிகழ்வெளி" நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கழக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு நூலை வெளியிட்டார். கனிமொழி அவர்கள் நூலை வெளியிட முதல் பிரதியை ஒளிப்பதிவாளர் பி.சி.ஶ்ரீ ராம் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி. பேசியதாவது, “துணை முதலமைச்சராக யார் பொறுப்பேற்க வேண்டும் என்பது முதலமைச்சர் எடுக்க வேண்டிய முடிவு. முதலமைச்சர், உதயநிதி ஸ்டாலினுக்கு அந்த வாய்ப்பை பொறுப்பை வழங்கி இருக்கிறார். அவர் மிகச்சிறப்பாக செயல்பட வேண்டும். அவருக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புதிதாக பொறுப்பேற்க உள்ள அமைச்சர்களுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.
தொடர்ந்து கூடுதல் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு உங்கள் அட்வைஸ் என்ன என்ற கேள்விக்கு, “நான் யாருக்கும் அட்வைஸ் செய்வதில்லை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை புரிந்து கொண்டு தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பை வழங்கி இருக்கிறார். அட்வைஸ் யாருக்கும் அவசியமில்லை இந்த காலத்தில் என்ன செய்ய வேண்டும் என்று அவரவர்களுக்கு தெரியும். உதயநிதிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்” என்றார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்