Tamilnadu

மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும் கொண்டு வருவார்! : துணை முதலமைச்சர் உதயநிதிக்கு குவியும் பாராட்டுகள்!

தமிழ்நாட்டின் வளர்ச்சி நோக்கியும், அது சார்ந்த மாற்றம் நோக்கியும் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசின் அமைச்சரவையில் மாற்றத்தை அறிவித்திருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

அதன் படி, இன்று மாலை செந்தில் பாலாஜி, கோவி செழியன், ராஜேந்திரன் மற்றும் நாசர் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதியேற்க இருக்கின்றனர்.

அதன் தொடர்ச்சியாக, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக விளங்கி வந்த உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சர் பொறுப்பு வகிப்பார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதனையடுத்து, உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ், “புதிய பொறுப்பில் திறம்பட செயலாற்றி பெரும் வெற்றி பெற தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உயர்வு பெற்றிருக்கும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். இன்று இந்திய அரசியலமைப்பு மற்றும் தமிழ்நாட்டு மக்களின் முன் உறுதியேற்கும் நீங்கள், நிச்சயம் அதன்படி செயல்படுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “பொறுப்பேற்ற அனைத்துத் துறையியிலும் மிகச்சிறப்பாக பணியாற்றி, அனைவரின் நன்மதிப்பைப் பெற்றவர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் துணை முதலமைச்சர் பொறுப்பால் மாநிலத்திற்கு செழிப்பையும், நலனையும், மக்கள் பயன்பெறும் பல புதிய திட்டங்களையும் கொண்டு வருவார் என உறுதியாக நம்புகிறேன்” என தனது X வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ், “தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராகும் சகோதரர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து, “துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின் அவர்களே, உங்களை வாழ்த்துகிறேன்! உங்கள் அன்னையைப் போலவே நானும் மகிழ்கிறேன்! இந்த உயர்வு பிறப்பால் வந்தது என்பதில் கொஞ்சம் உண்மையும், உங்கள் உழைப்பால் வந்தது என்பதில் நிறைய உண்மையும் இருக்கிறது.." என புகழ் மொழி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

Also Read: “பவள விழாக் கண்டுவிட்டோம்! மாநில சுயாட்சிக் கொள்கையை வென்றெடுப்போம்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!