Tamilnadu

“எதற்கெடுத்தாலும் கலவரத்தை ஏற்படுத்த நினைப்பதுதான் பாஜகவின் வேலை” -அமைச்சர் சேகர்பாபு காட்டம்!

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோயிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்திட 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை வழங்கி வெள்ளித்தகடு வேயும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் சந்திரமோகன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் ( நிர்வாகம் ) இரா.சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை நன்கொடையாக வழங்கிய வெள்ளி நன்கொடையாளர் சபாபதி ராஜரத்தினம் அவர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது, “திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த வெள்ளித் தேர் ராஜிவ் காந்தி மரணத்தின் பொழுது கலவரக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. அதை தொடர்ந்து வெள்ளித்தேரை புனரமைக்கும் பணி சுமார் 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்து சமய அறநிலைத்துறைக்கு கவனத்திற்கு கொண்டு வந்தவுடன் முதலமைச்சர் வெள்ளித்தேரை உருவாக்கும் பணியை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

அந்த வகையில் முதற்கட்டமாக கள ஆய்வு செய்து அந்த வெள்ளி தேரை முதற்கட்டமாக மரத் தேராக உருவாகும் பணி நிறைவுற்று இருக்கிறது. தொடர்ந்து இந்த வெள்ளித்தேருக்கு சுமார் 450 கிலோ வெள்ளி தேவைப்படுகிறது. திருக்கோவில் சார்பில் ஒன்பது கிலோ நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வெள்ளித்தேரை உருவாக்குவதற்கு 100 கிலோ வெள்ளிக்கட்டிகளை திருப்பணிகளுக்காக நன்கொடைகளாக வழங்கி உள்ளனர். இதனுடைய மதிப்பு ரூ.1 கோடி 2 லட்சம் ஆகும். மீதமுள்ள 300 கிலோ அளவில் உள்ள வெள்ளிக்கட்டியை நன்கொடையாக பெறவுள்ளோம்.

ஆண்டுக் கணக்கில் முடங்கியிருந்த திருத்ததேர்களை பக்தர்களுக்கு கொண்டு வந்த ஆட்சி இந்த ஆட்சி. ராமேஸ்வரம் கோவிலில் 12 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேரை ஓட வைத்த பெருமை இந்த ஆட்சியை சேரும். 150 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் தேரினை பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறோம்.

68 தங்க தேர், 55 வெள்ளித் தேர் பயன்பாட்டில் உள்ளது. ஐந்து தங்க தேர்களும், 9 வெள்ளித் தேர்களும் புதிதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பெரியபாளையம் திருக்கோவிலில் தங்கத்தேர் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மீதமுள்ள தேர்களுக்கு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு 1000 கோடி ரூபாய் மேல் நன்கொடையாளர்கள் வந்துள்ள சூழல் ஏற்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்தமாக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 5,433 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படப்பட்டு வருகிறது. இதுவரை மாநில வல்லுநர் குழுவால் 10,172 கோவில்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரம் திருக்கோவில்களுக்கு கூட அதிமுக ஆட்சியில் ஒப்புதல் பெற்றிருக்க மாட்டார்கள். இந்த ஆட்சியில் 59 கோடி மதிப்பில் 97 மரத்தேர் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தான் திருக்குளங்கள் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருக்கோவில் குளங்கள் சீரமைக்கும் பணிகளுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து 220 திருக்குளங்கள் செப்பினிடம் பணிகள் நடைபெற்று வருகிறது. 86 கோடி ரூபாய் செலவில் 121 அன்னதான கூடங்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 2025 கோவில்களில் திருப்பணிகள் நடந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 2500 கோவில்களில் திருப்பணிகள் நடத்த பணிகள் நடைபெற்று வருகிறது.

எதை செய்தாலும் எதிர்ப்பதுதான் பாஜகவின் வாடிக்கை, ஏதாவது ஒரு வகையில் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும், மக்களிடம் உள்ள நன்மதிப்பை குறைக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்பட கூடியவர்கள் பாஜகவினர். விடுமுறை நாட்களில் மருதமலை கோயில்களில் அதிக வாகனங்கள் வருகிறது. விடுமுறை நாட்களில் மட்டும் ஆன்லைன் பதிவு கொண்டு வந்தால் பக்தர்களின் சிரமத்தை குறைக்கும் வகையில் அரசு நிர்வாகங்கள் திட்டமிட முடியும், வரும் காலங்களில் ஆன்லைன் பதிவு தேவையில்லை எனில் ரத்து செய்யப்படும்.

கோயில்களில் மழை காலங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கோயில் பிரசாதங்கள் தரமாக இருக்க வேண்டும் என்பதற்காக குழு அமைக்கப்பட்டு உணவின் தரத்தை பரிசோதித்து தொடர்ந்து அறிக்கை அளித்து வருகின்றனர். கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் உணவுகளில் ஒன்றிய அரசால் தரப்படும் சான்றிதழ் 500க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு தரப்பட்டுள்ளது.

பழனி பஞ்சாமிர்தம் குறித்து தவறான சூழலை உருவாக்கியவர் மீது திருக்கோவில் சார்பில் புகார் அளிக்கப்பட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பழனி பஞ்சாமிர்தம் குறித்து விஷம பிரச்சாரம் மேற்கொண்டவர்களை நீதிமன்றம் கண்டித்துள்ளது. தேவையற்ற குழப்பங்களை தவிர்க்க வேண்டும் என்று இதுபோன்ற செய்திகளை வெளியிடுவர்களுக்கு கேட்டுக்கொள்கிறேன்.

பக்தர்களுக்கு சிறந்த முறையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்திய அளவில் இருக்கக்கூடிய அன்னதானத் திட்டத்தை முதன்மையான அன்னதானத்திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 1 வேலை அன்னதானம் 754 தருக்கோயில்களில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது 763 கோயில்களில் 1 வேலை அன்னதானம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

முன்பு இரண்டு திருக்கோவில்களில் மட்டும் தான் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் நடைமுறையில் இருந்தது. கூடுதலாக இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 9 திருக்கோவில்களுக்கு முழு அன்னதானம் திட்டத்தை விரிவு படுத்தி தற்போது 11 திருக்கோவில்களின் நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 92 ஆயிரம் பேர் அன்னதானம் திட்டத்தால் பயனடைகிறார்கள் எனவும் ஆண்டுக்கு இந்த அன்னதானம் திட்டத்திற்கு 105 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது” என்றார்.

Also Read: இன்று தி.மு.க கூட்டணிக் கட்சிகள் கலந்துகொள்ளும் பவள விழா பொதுக்கூட்டம் : விழாக் கோலம் பூண்ட காஞ்சிபுரம் !