Tamilnadu

“3 ஆண்டில் 1,300 விளையாட்டு வீரர்களுக்கு ரூ. 33 கோடி ஊக்கத்தொகை ” - அமைச்சர் உதயநிதி பெருமிதம் !

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் வழங்கும் விழா மற்றும் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு ஊராட்சித் தலைவர்களுக்கு கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்'ஸை வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும், ரூ.36 கோடி மதிப்பில் விளையாட்டு உபகரணங்களைக் கொண்டுபோய் சேர்க்க, கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ்' திட்டத்தை, மதுரையில் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தோம். டெல்டா மாவட்டங்கள் இதுவரை தமிழ்நாடு முழுக்க 13 மாவட்டங்களில் அனைத்து ஊராட்சிகளுக்கும் கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸை வழங்கி இருக்கிறோம்.

டெல்டா மாவட்டங்கள், தமிழ்நாட்டுக்கே உணவளிக்கின்ற மாவட்டங்கள் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்குகின்ற மாவட்டம்தான் நம் டெல்டா மாவட்டம். அதனால்தான், முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-இல், மாவட்ட அளவில் வென்றவர்களுக்கு, இங்கே பரிசுகளை வழங்க, நாங்கள் நேரில் வருகை தந்திருக்கிறோம். தமிழ்நாட்டின் பட்டித்தொட்டிகளில் இருந்து, தலைசிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க, இந்தாண்டு, முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி'களுக்கான, பரிசுத் தொகையை, நம் முதலமைச்சர் அவர்கள், 37 கோடி ரூபாயாக உயர்த்தித் தந்திருக்கிறார்.

இந்தப் போட்டிக்கு, சென்றாண்டு விண்ணப்பித்தவர்கள் 6 லட்சத்து 71 ஆயிரம் பேர். இந்த ஆண்டு விண்ணப்பித்துப் போட்டியிடுபவர்கள் 11 லட்சத்து 56 பேர். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை, தமிழ்நாட்டில் விளையாட்டினை, மாபெரும் இயக்கமாகவே இது மாற்றியுள்ளது. சர்வதேசப் போட்டிகள் இந்த நிகழ்ச்சிக்குக்கூட, விளையாட்டுத் துறையைச் சேர்ந்த நிறைய சாதனையாளர்கள் வந்திருக்கிறார்கள்.

நம் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த, போல் வால்ட் வீராங்கனை, தங்கை ரோசி மீனா, இங்கே வருகை தந்திருக்கிறார். தங்கை ரோசி மீனா, நேஷனல் ஓபன் அத்தலெட்டிக் சாம்பியன்சிப், ஆல் இந்தியா யுனிவர்சிட்டி அத்தலெட்டிக் சாம்பியன்சிப், ஏசியன் இண்டோர் அத்தலெட்டிக் சாம்பியன்சிப் போன்ற பல்வேறு மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான, போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றிருக்கிறார். குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 7 தங்கப்பதக்கங்கள், 2 வெள்ளிப்பதக்கங்கள், 2 வெண்கலப்பதக்கங்கள் வென்று நம் தமிழ்நாட்டுக்குப் பெருமைத் தேடித் தந்துள்ளார் தங்கை ரோசி மீனா. தமிழ்நாடு அரசின், மிஷன் இன்டர்நேஷனல் மெடல் ஸ்கீம் பயனாளியான தங்கை ரோசி மீனா, விளையாட்டு வீரர்களுக்கான 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு நியூஸ் ஸ்பிரிட் அண்டு பேப்பர்ஸ் லிமிடெட்', டி.என்.பி. எல் நிறுவனத்தில், அரசுப்பணியையும் பெற்றுள்ளார். விளையாட்டுத்துறையில், சாதிக்கத் துடிக்கும் எல்லோருக்கும், முன்மாதிரியாகத் திகழும், தங்கை ரோசி மீனா அவர்களுக்கு, அனைவரின் சார்பாக நம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

ஹாக்கி வீரர் தஞ்சையைச் சேர்ந்த, தம்பி நந்தகுமார் இங்கே வந்து இருக்கிறார். எஸ்.டி.ஏ.டி. (SDAT) மாணவரான தம்பி நந்தகுமார் +கேலோ இந்தியா யூத் கேம்ஸ்', +மென்ஸ் ஜுனியர் நேஷனல் சாம்பியன்சிப் போட்டிகளில் தமிழ்நாடு அணிக்காக விளையாடியவர். ஜுனியர் மென்ஸ் சவுத் ஜோன் சாம்பியன்சிப்பில், தமிழ்நாடு, தங்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்தான் அவர். அவரையும் நம் அனைவரின் சார்பாக வாழ்த்துகிறோம். இந்த இரண்டு பேர் மட்டுமல்ல, தமிழ்நாட்டு வீரர்கள், வீராங்கனைகள், உலக அளவில், பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறார்கள்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை சென்னையில் நாம் நடத்தினோம். இந்த ஆண்டு 45-வது பிடே செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரியில் நடந்தது. அங்கு இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி தங்கப் பதக்கங்களை வென்றது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தம்பி குகேஷ் அவர்கள், இறுதிப்போட்டியில் சிறப்பாக விளையாடி, இந்தியாவுக்குத் தங்கப்பதக்கத்தை உறுதி செய்தார்.நம் கிராண்ட் மாஸ்டர்கள் தம்பி பிரக்ஞானந்தா, வைஷாலி, ஸ்ரீநாத் நாராயணன் ஆகியோரும், இந்திய அணியில் இடம்பெற்று, சிறப்பான பங்களிப்பைத் தந்தனர். ரூபாய் 90 லட்சம் நேற்று முன் தினம், அவர்கள் நாடு திரும்பியதும், நம் முதலமைச்சர் அவர்கள், மொத்தம் ரூபாய் 90 லட்சத்திற்கான உயரிய ஊக்கத்தொகை கொடுத்து, அவர்களை எல்லாம் பெருமைப்படுத்தி உள்ளார்கள்.

அதேபோல, பாரீஸில் சமீபத்தில் நடந்த, பாரா ஒலிம்பிக் போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 6 மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்துகொண்டார்கள். அந்த ஆறு வீரர்களுக்கும், போட்டிக்குச் செல்வதற்கு முன்பாகவே, சென்ற வருடம்வரை 5 லட்சம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வருடம் அதை உயர்த்தி, நம் முதலமைச்சர் அவர்கள் தலா 7 லட்சம் ரூபாயை ஊக்கத்தொகையாக வழங்கினார். அந்த 6 பேரில் இன்றைக்கு துளசிமதி, மனிஷா, நித்யஸ்ரீ, மாரியப்பன் தங்கவேல் என 4 பேர் வெற்றிபெற்று, பதக்கத்துடன் திரும்பி வந்திருக்கிறார்கள். வெள்ளிப்பதக்கம் வென்ற தங்கை துளசிமதிக்கு ரூபாய் 2 கோடி, வெண்கலப்பதக்கம் வென்ற தங்கைகள் மனிஷா, நித்யஸ்ரீ மற்றும் தம்பி மாரியப்பனுக்கு தலா ரூபாய் ஒரு கோடி என மொத்தம் ரூபாய் 5 கோடியை, நம் முதலமைச்சர் அவர்கள், உயரிய ஊக்கத்தொகையாக அளித்திருக்கிறார்கள்.

உலகமே வியக்கின்ற வகையில், தெற்கு ஆசியாவிலேயே, முதன் முறையாக, பார்முலா-4 இரவு நேர, கார் பந்தயத்தை சென்னையில் கடந்த மாதம், வெற்றிகரமாக நடத்தி காட்டினோம். கடந்த ஜனவரி மாதம், கேலோ இந்தியா இளையோர் போட்டிகளை தமிழ்நாட்டு வரலாற்றிலேயே முதன்முறையாக சிறப்பாக நடத்திக் காட்டினோம். கேலோ இந்தியா போட்டியில், 33 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன், தமிழ்நாடு முதன் முறையாக, பதக்கப்பட்டியலில் இந்தியாவிலேயே இரண்டாவது இடம் என்ற பெருமையை நாம் பெற்றோம். நம் விளையாட்டு மேம்பாட்டுத்துறை எடுத்துவரும் பல்வேறு முயற்சிகளுக்கு, பல்வேறு திசைகளில் இருந்தும், பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. நம் விளையாட்டுத் துறையைப் பாராட்டி, காம்பிடரேஷன் ஆஃப் இந்தியன் இண்டஸ்ட்ரீஸ்' என்ற அமைப்பு பெஸ்ட் ஸ்டேட் ப்ரோமோட்டிங் ஸ்போர்ட்ஸ்' என்ற உயரிய விருதைக் கொடுத்து, நம் துறையைக் கௌரவப்படுத்தியது.

உயரிய விருது தி இந்து ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிக்கை சார்பாக, பெஸ்ட் ஸ்டேட் ஃபார் தி ப்ரோமோஷன் ஆஃப் ஸ்போர்ட்ஸ் எனும் உயரிய விருதையும் நம் துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் வழங்கியது. தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையைத் தொடங்கி, ஏழை, எளிய, மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்குத் தொடர்ந்து உதவிகளைச் செய்து வருகிறோம். தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் மூலமாக, நிதியுதவி பெற விரும்புகின்ற விளையாட்டு வீரர்கள், தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் (TNCF) என்ற இணையதளத்தில் எப்போது வேண்டுமானாலும், விண்ணப்பிக்கலாம். இந்த மூன்று வருடங்களில் மட்டும், நம் முதலமைச்சர் அவர்கள், கிட்டத்தட்ட 1,300 விளையாட்டு வீரர்களுக்கு, 33 கோடி ரூபாய்க்கும் மேலாக, உயரிய ஊக்கத்தொகையை வழங்கி, கௌரவப்படுத்தி இருக்கிறார். அரசு மற்றும் அரசுப் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில், விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்று, பல வருடங்களாக, விளையாட்டு வீரர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கழக அரசு அமைந்த பிறகு, முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளின் பேரில், முதற்கட்டமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு, அரசுப்பணி வழங்க இருக்கிறோம் என்பதை, இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டுத்துறை வளர்ச்சி என்பது, நகரங்களில் மட்டும் தேங்கிவிடக் கூடாது, அவை கிராமங்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு துவங்கப்பட்டதுதான் இந்த கலைஞர் ஸ்போர்ட் கிட்ஸ்' திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளோம். கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில், எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன. இருந்தாலும், விளையாட்டுத்துறை சார்பாக, முதல்முறையாக கலைஞர் அவர்களின் பெயரால் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றால், அது இந்த கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் திட்டம்தான். கலைஞரின் பெயரை, இந்தத் திட்டத்திற்கு சூட்டியதற்கான காரணம், ஒரு விளையாட்டு வீரனுக்கு இருக்கக்கூடிய அத்தனை குணங்களும், திறமைகளும், கலைஞர் அவர்களுக்கு இருந்- ததுதான். கலைஞர் அவர்களின் சிறப்பு அது. அதனால்தான் யாராலும், எப்போதும், வீழ்த்த முடியாத ஒரு அரசியல் வீரராக, கலைஞர் அவர்கள் திகழ்ந்துகொண்டு இருந்தார்கள். அத்தகைய கலைஞர் அவர்களின் பெயரால், இந்த விளையாட்டு உபகரணங்கள், இன்று வழங்கப்பட உள்ளன. எனவே, இவற்றைப் பெறக்கூடிய இளைஞர்கள், கலைஞர் அவர்களுக்கு இருந்த அத்தனை குணங்களையும், திறமைகளையும், தாங்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கும்பகோணத்தில் மினி ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தோம். அதன்படி 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, மினி ஸ்டேடியம் அமைக்க சட்டமன்றத்தில் அறிவித்து விட்டோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன என்பதையும் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு அனைத்து வகையிலும், நம் திராவிட மாடல் அரசும், நம் முதலமைச்சர் அவர்களும் துணை நிற்பார்கள் என்று கூறிக்கொண்டு, இந்த வாய்ப்பை அளித்த அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன்” என்று தெரிவித்தார்.

Also Read: சென்னைக்கு பூஜ்யம் ... மும்பை மெட்ரோவுக்கு 25 ஆயிரம் கோடி... மாநில அரசின் பங்கையும் வழங்கிய ஒன்றிய அரசு !