Tamilnadu

பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : தமிழ்நாட்டிற்கான நிதியை உடனே வழங்க வலியுறுத்தல்!

தமிழ்நாட்டின் வளர்ச்சித்திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு செய்வதில் ஒன்றிய பா.ஜ.க அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட திட்டத்திற்கு ஒன்றிய அரசின் பங்கான 7 ஆயிரத்து 425 கோடி ரூபாயில் ஒரு ரூபாய் கூட இன்னும் விடுவிக்கப்படவில்லை.

இதேபோல் 2023-ம் ஆண்டு அடுத்தடுத்து 2 இயற்கை பேரிடர்களை தமிழ்நாடு சந்தித்த நிலையில், பேரிடர் நிவாரண நிதியாக 37 ஆயிரத்து 986 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு கோரியது. ஆனால் 276 கோடி ரூபாயை மட்டுமே ஒன்றிய அரசு வழங்கியது. இதேபோல் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியையும் ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை டெல்லி சென்றார். அப்போது விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து இன்று தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறையின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

அங்கிருந்து பிரதமர் அலுவலகத்திற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். அப்போது தமிழ்நாட்டிற்கு ஒதுக்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்க வலியுறுத்தினார்.

Also Read: சென்னைக்கு பூஜ்யம் ... மும்பை மெட்ரோவுக்கு 25 ஆயிரம் கோடி... மாநில அரசின் பங்கையும் வழங்கிய ஒன்றிய அரசு !