Tamilnadu

பழங்குடியினரின் கலாச்சாரம், மொழிகளுக்கு புத்துயிர்: 2 நாள் தேசிய தொல்குடி மாநாடு -எங்கு எப்போது? - விவரம்

பழங்குடியினரின் கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல் என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய தொல்குடி மாநாடு 27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது.

இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்தக்குடி” என்ற ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பாமாலையின் வரிகள் தமிழக பழங்குடியின மக்களின் தொன்மையினை எடுத்துரைக்கிறது.

அத்தகைய, பழங்குடியினரின் தொன்மை, அடையாளங்கள் ஆகியவற்றுடன் பண்பாடு, பழக்க வழக்கங்கள், வரலாற்றினை தொடர்வதற்கும் அதனை அடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்வதற்கும் பழங்குடியின மொழிகளைப் புரிந்துகொள்வது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மேலும், "ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு பழங்குடி மொழி வழக்கொழிந்து வருகிறது" என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, பழங்குடியின மொழிகளின் மீதான உலக மக்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில் “பழங்குடியின மொழிகளுக்கான பத்தாண்டு (2022-2032)” என ஐக்கிய நாடுகள் பொதுப்பேரவையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பழங்குடியின மக்களின் மொழி வளங்கள் மற்றும் ஒலி வடிவங்களையும் எதிர்கால தலைமுறையினருக்குப் பயன்படும் வகையில் இனவரைவியல் (Ethnography) நோக்கில் ஆவணப்படுத்திப் பாதுகாக்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் 2024-2025 நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு, ரூபாய் இரண்டு கோடி நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்காணும் தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, தமிழ்நாடு பழங்குடியின மொழிகளை ஆவணப்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளை கண்டறிய புகழ்பெற்ற தேசிய கல்வி நிலையங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் பணிபுரியும் ஆய்வாளர்களை கொண்டு “தமிழக பழங்குடியினரின் கலாச்சாரத்தை பாதுகாத்தல் மற்றும் வளப்படுத்துதல்” என்ற தலைப்பில் இரண்டு நாள் தேசிய தொல்குடி மாநாடு 27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய நாட்களில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் ’வெஸ்டின்’ சென்னை மற்றும் ’சென்னை சமூகப் பணி பள்ளியில்’ நடைபெறவுள்ளது.

இத்தேசிய மாநாட்டினை தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை மற்றும் சென்னை சமூகப் பணி பள்ளியின் சமூக நீதி மற்றும் சமத்துவ மையத்துடன் இணைந்து நடத்தப்படுகிறது.

இத்தேசிய மாநாடு பின்வரும் கருப்பொருள் அடிப்படையில் நடைபெறவுள்ளது:-

I. அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடி மொழிகள் மற்றும் பேச்சு மொழி மரபுகள்;

II. அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடி மொழிகளுக்கான கற்பித்தல் மற்றும் கற்றல் வளங்கள்;

III. அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடி மொழிகளின் புத்துயிரூட்டுதல்: புதிய தொழில்நுட்பங்கள் & புதிய ஊடகங்கள்;

IV. அழிந்து வரும் பழங்குடி மொழிகளை ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்;

V. பழங்குடியின மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்கான திட்டங்கள்;

VI. தமிழ் பழங்குடியினர்: மக்களின் பேச்சு மற்றும் மொழிப்பாதுகாப்பு நடைமுறைகள்:

மேற்காணும் தேசிய மாநாட்டில் சிறப்பு அழைப்பாளர்களாக ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. சந்துரு, இந்திய மொழியியல் சங்கத்தின் முன்னாள் தலைவர் திரு.க. உமா மகேஷ்வர் ராவ், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பின்(UNESCO) இந்தியாவிற்கான பண்பாட்டு திட்ட அலுவலர் செல்வி. ஜூன்ஹி ஹான் (Junhi Han), தமிழ் பாடலாசிரியர் மற்றும் கார்க்கி மொழியியல் ஆய்வு நிறுவனர் முனைவர். மதன் கார்க்கி ஆகியோர் பங்கு பெறுகின்றனர்.

புகழ்பெற்ற தேசிய கல்வி நிறுவனங்கள் மற்றும் ஆய்வு மையங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் தேசிய மாநாட்டில் பங்கு கொண்டு சமர்ப்பிக்கும் மாநாட்டின் கருப்பொருள் குறித்து ஆய்வு அறிக்கையின் மீது கலந்துரையாடல் மேற்கொண்டு பின்வரும் முடிவுகள் எதிர்நோக்கப்படுகின்றன:-

1. தமிழ்நாட்டில் பழங்குடி மொழிகளைப் பாதுகாப்பதற்கான கொள்கையை உருவாக்குதல்;

2. மாநாட்டின் நடவடிக்கைகளை வெளியிடுதல்;

3. பழங்குடியினரின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பதில் பணிக்குழுக்களை நிறுவுதல்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சிய அரங்கில், தமிழ்நாடு பழங்குடியினரின் பண்பாட்டு நிகழ்வுகளை எடுத்துரைக்கும் விதமாக கணியன் கூத்து, பளியர் மற்றும் குருமன்ஸ் ஆகிய பழங்குடியினரின் நடனங்கள் நடைபெற உள்ளன. மேலும், தோடா எம்ப்ராய்டரி, குரும்பா ஓவியங்கள் மற்றும் காட்டுநாயக்கர், இருளர், கோத்தர்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்படவுள்ளன.

தமிழ்நாட்டின் சமூக-கலாச்சார சூழலில் பழங்குடியின மொழிகள் செழித்து வளரவும், தொடர்ச்சியாக மாறிவரும் சமூக பண்பாட்டு மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுதல் குறித்து ஆராய்வதன் மூலம் பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் மொழிகளுக்கு புத்துயிர் அளிக்க இந்த தேசிய தொல்குடி மாநாடு ஒரு சிறந்த தளத்தையும் வாய்ப்பையும் வழங்கும்.