Tamilnadu

“அமலாக்கத்துறை வழக்குகள் போடுவதை மட்டுமே ஒரு பாலிஸியாக வைத்துள்ளது...” - அமைச்சர் ரகுபதி பேட்டி!

சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் என்ற வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. பல்வேறு இன்னல்கள், சிக்கல்கள், இடையூறுகள் வந்த போதும் சட்டரீதியாக இந்த பிரச்னையை எதிர்கொண்டார் செந்தில் பாலாஜி.

தொடர் போராட்டங்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கி இன்று (செப்.26) தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு பலரும் வரவேற்பு அளித்து வரும் நிலையில், 471 நாட்களுக்கு பிறகு இன்று மாலை அல்லது நாளை செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததற்கு திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வாழ்த்துகளையும், வரவெற்பையும் அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டையில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அமைச்சர் ரகுபதி பேசியதாவது, “செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது மகிழ்ச்சியான ஒன்று.

கடந்த 15 மாதங்களாக அவர் சட்டப் போராட்டம் நடத்தி வந்துள்ளார். அவரைப்போல பொறுமையோடு சட்டப் போராட்டம் நடத்தியவரை பார்க்க முடியாது. அந்த அளவிற்கு சிறையில் இருந்து கொண்டு அமைச்சர் பதவி கூட வேண்டாம் என்று சொல்லி மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு இன்று நிபந்தனை ஜாமின் பெற்றுள்ளது வரவேற்கத்தக்க ஒன்று. நிச்சயமாக அவர் வழக்குகளில் வெற்றி பெறுவதற்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

அமலாக்கத்துறை பதிந்துள்ள வழக்குகள் எக்கச்சக்கமாக உள்ளது. ஆனால் அவர்கள் எத்தனை வழக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்கள்; எத்தனை வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளார்கள் என்பது மிக மிக குறைவாகத்தான் இருக்கும். வழக்குகள் போடுவது என்பதை ஒரு பாலிஸியாக அமலாக்கத்துறையினர் வைத்துள்ளனரே தவிர, இறுதி தீர்ப்புக்கு அவர்கள் செல்வது கிடையாது.

செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவைப் பொறுத்து உள்ளது. அதை பற்றி கருத்து கூறுவதற்கு யாருக்கும் உரிமை கிடையாது.” என்றார்.

Also Read: “செந்தில் பாலாஜி வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல் வேகமாக செயப்படுவார்” - இ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி !