Tamilnadu

”கோட்சே பார்வையில் செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி” : சபாநாயகர் அப்பாவு பதிலடி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கூறி வரும் கருத்துக்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கிடையே இந்திய அரசியலமைப்பில் பிரதானமான மதச்சார்பின்மை, ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியானது என்றும் இதனால் இந்தியாவிற்கு மதச்சார்பின்மை தேவையற்றது என ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுநரின் இந்த கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் சிவசேனா (தாக்கரே) கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் பிரியங்கா சதுர்வேதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கோட்சே பார்வையில் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாக சபாநாயகர் அப்பாவு பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக, நெல்லையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அப்பாவு "இந்தியா என்பது ஒரு மதச்சார்பற்ற நாடு. இங்கு சாதி, மதம், பாலுணர்வு, பிறப்பு அடிப்படையில் எந்த வேறுபாடும் காட்டக்கூடாது என்பதையே நமது இந்திய அரசியலமைப்பு கூறுகிறது.

ஆனால் இங்கு இந்தியா அரசியலமைப்பு சட்டத்திற்கு மனுதர்மம் மற்றும் சானாதன கருத்துக்களை பா.ஜ.கவினர் பேசி வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் இந்த போக்கையே கடைப்பிடித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து கோட்சே பார்வையிலேயே செயல்பட்டு வருகிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை படித்து அதன்படி ஆளுநர் நடந்து கொள்வது அவருக்கு நல்லது” என தெரிவித்துள்ளார்.

Also Read: மின்சாரம் விநியோகத்திற்கான டெண்டர் அதானிக்கு ஒதுக்கீடு : பணக்காரர்களுக்காக மக்களை நசுக்கும் பா.ஜ.க அரசு!