Tamilnadu

“50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இலக்கு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் மாநிலத்தின் பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. 2030ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை நிர்ணயித்து அதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக துபாய், அபுதாபி, சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்படி அவர் அழைப்பு விடுத்தார்.அதன்படி தமிழ்நாட்டுக்கு ஏராளமான முதலீடுகள் கிடைத்தன.

இதனைத் தொடர்ந்து சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும், முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, 9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக, உலக நாடுகளின் முன்னணி நிறுவனங்களை சந்தித்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை கொண்டுவரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்று அங்கும் முதலீடுகளை ஈர்த்தார். தமிழ்நாட்டுக்கு வரும் இத்தகைய முதலீடுகளுக்கு முக்கிய காரணமாக தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் இருந்து வருகிறது.

அந்த நிறுவனத்தின் பணியாளர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். அதனைத் தொடர்ந்து தனது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ” அரசு நிர்வாகத்தில் உள்ள இளம் ரத்தங்களான தொழில் வழிகாட்டி நிறுவன பணியாளர்களைச் சந்தித்தேன்.

இவர்களுடைய சிறப்பான பணியினால், நாம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ஈர்த்த 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளில் 60 விழுக்காடு பணிகள் நிறைவேறியிருக்கிறது; மீதமுள்ள 40 விழுக்காடு பணிகள் நிறைவேறுவதற்கான பணிகளை விரைந்து செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளேன். 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் என அவர்களுக்கு இலக்கு நிர்ணயித்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

Also Read: “தி.மு.க - வி.சி.க இடையே எந்த சலசலப்பும் இல்லை, உருவாக வாய்ப்பும் இல்லை” : தொல் திருமாவளவன் திட்டவட்டம்!