Tamilnadu

”மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது என்ன?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொளத்தூர் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு செய்து வருகிறார். கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கோட்டம் 69ல் புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமான பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் புதிதாக கட்டப்பட்டுள்ள சென்னை துவக்கப் பள்ளியினை திறந்துவைத்தார். இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் மதுரை சாமி மடத்தில் புணரமைப்பு செய்யப்பட்ட உடற்பயிற்சி கூடத்தினை திறந்துவைத்தார்.

பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து இரண்டு நாட்களில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளேன். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது.

அ.தி.மு.க போல், ஏமாற்றி நிதி முதலீடுகளை நாங்கள் பெறவில்லை. அமெரிக்க பயணத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த முதலீடுகள் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கையே வெள்ளை அறிக்கைதான்.

கொளத்தூர் தொகுதி என்னுடைய சொந்த தொகுதி. வீட்டு பிள்ளை போல தான் என்னை பார்ப்பார்கள். எப்போதும் இங்கு வருவேன், நினைக்கும் போதெல்லாம் இங்கு நான் வருவேன். அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை கண்டு பழனிசாமிக்கு வயிற்றெரிச்சல்” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பதிலடி!