Tamilnadu

“இந்தியா கூட்டணி எஃக்கு கோட்டை போன்றது...” - செல்வப்பெருந்தகை பேட்டி !

இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் இந்த தேச நலன் மீது அக்கறை உள்ளவர்கள். இவர்கள் ஒருபோதும் இந்த கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சி விமான நிலையத்தில் பேட்டியளித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செல்வப்பெருந்தகை பேசியதாவது, “பாசிச பாஜகவை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகத்தில் மிகப்பெரிய மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணியை சேர்ந்த கட்சி தலைவர்கள் அனைவரும் பங்கேற்க உள்ளனர்.

இந்தியா கூட்டணி எஃக்கு கோட்டை போல் வலிமையாக உள்ளது. பாசிச பாஜகவை வீழ்த்துவது என்கின்ற ஒற்றை இலக்கோடு செயல்படுகிறது. இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் இந்த தேச நலன் மீது அக்கறை உள்ளவர்கள். இவர்கள் ஒருபோதும் இந்த கூட்டணியில் இருந்து வெளியேற வாய்ப்பு இல்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குள் இருக்கக்கூடிய உட்கட்சி முரண்பாடுகள் குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை அதற்கு அக்கட்சித் தலைவர் விளக்கம் அளிப்பார்.

ஒரு சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வரும் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆவதற்கான முழு தகுதி உடையவர். அவர் துணை முதலமைச்சராக பதவி ஏற்பதை காங்கிரஸ் கட்சி முழு மனதுடன் வரவேற்கிறது. அவர் துணை முதலமைச்சராக விரைவில் அறிவிக்கப்படுவார் என நம்புகிறோம்.

வெளிநாட்டில் ராகுல் காந்தி பேசிய பேச்சுகளை பாசிச பாஜகவினர் திரித்து பிரசாரம் செய்கின்றனர். அதனை ஒருபோதும் மக்கள் நம்ப மாட்டார்கள். ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தியாவில் தலித்துகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மலைவாழ் பழங்குடியின மக்களுக்கும், சிறுபான்மையின மக்களுக்கும் அரணாக இருப்பது காங்கிரஸ் கட்சி. கற்பனைக்கு எட்டாத வகையில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து பேசிவருகிறார்கள். அதில் எந்த உண்மையும் இல்லை. அதில் கலப்படம் செய்ய வேண்டுய தேவை யாருக்கும் இல்லை.” என்றார்.

Also Read: “வறுமையால் எனக்கு படிப்பு எட்டாக்கனியாக இருந்தது” : மனம் உருகி பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!