Tamilnadu

“வறுமையால் எனக்கு படிப்பு எட்டாக்கனியாக இருந்தது” : மனம் உருகி பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட 9 அரசு பள்ளிகளில் பயிலும் 1480 மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அத்துடன் கடந்த ஆண்டு மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவியருக்கு ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.2 ஆயிரம் என்ற வரிசையில் நிதி மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

மதுரவாயல் எம்.எல்.ஏ க.கணபதி தலைமையில் இந்நிகழ்ச்சியில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று திட்டத்தை தொடங்கி வைத்தார். அத்துடன் திமுக கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “மாணவர்களுக்கு சைக்கிள் கொடுக்கப்படுவது பள்ளியின் தூரத்தை விரைவாக அடைய வேண்டும் என்ற நோகத்தில் மட்டுமல்ல, இதனால் உலக வெப்பநிலைமயமாதல் கட்டுப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி நடப்பது, ஓடுவது போன்ற சிறந்த உடற்பயிற்சி சைக்கிள் ஓட்டுவதுதான். அதனால்தான் அமெரிக்க சென்ற நமது முதலமைச்சர் சைக்கிள் ஓட்டி தனது உடற்பயிற்சியை மேற்கொண்டார்” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “நான் படிக்கும் காலத்தில் வறுமை காரணமாக 12 மேல் படிக்கவில்லை. படிப்பு என்பது எனக்கு எட்டாக்கனியாக இருந்தது. நான் இதற்கு முன்பு 2 முறை மேயராகவும், எம்எல்ஏவாகவும், தற்போது அமைச்சராகவும் உள்ளேன். இதெல்லாம் பதவி இருக்கும் வரைதான். ஆனால் நான் இறப்பதற்கு முன்பு வரை என்னுடன் வரப்போவது நான் படித்த படிப்புதான்” என உருக்கமாக கூறினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “டெங்குக் காய்ச்சலின் பரவல் குறையத் தொடங்கி தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது. டெங்கு உயிரிழப்புகளை பொறுத்தவரையில் 2016, 2017ஆம் ஆண்டுகளில் டெங்கு பாதிப்பால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்பட்டிருந்தன. அந்த நிலை தற்போது இல்லை.

கேரள - தமிழக எல்லைகளான 17 பகுதிகளில் சுகாதாரத்துறையின் நிபா வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எல்லை கடந்து வருபவர்களிடம் வெப்பநிலைமாணி கொண்டு பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதுதவிர குரங்கம்மை நோய்க்கென தமிழகத்தில் சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. தற்போது தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை. மழைக்காலம் வருவதால் எங்கும் தண்ணீர் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

Also Read: தமிழ்நாட்டு மீனவர்கள் விவகாரம் : “புதிய இலங்கை அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்” - வைகோ வலியுறுத்தல்!