Tamilnadu

”புதுவீட்டில் குடியேறும் உங்கள் வாழ்க்கை சிறக்கட்டும்” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சி!

சென்னை எழுப்பூரில் 114 குடும்பங்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மூலம் வீடுகளை ஒதுக்கீடு செய்வதற்கான ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 114 குடும்பங்களுக்கு புதிய வீட்டிற்கான ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் 1970ல் இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி வைத்தார்.பின்னர் தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என நம் தலைவர் அவர்கள் அதை மேம்படுத்தி உள்ளார்.

கழக அரசு உங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை இன்று நிறைவேற்றியுள்ளது. உங்களுக்கான வீட்டில் இனி நீங்கள் நிம்மதியாக இருக்கலாம். வீடு இல்லாததால் அரசின் ஆவணங்கள் கிடைப்பதில் சிக்கல் இருந்தது. இனி அந்த சிக்கல் இருக்காது. எல்லா அரசு ஆவணங்களும் கிடைக்கும். வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்லலாம். உங்களுக்கு உதவி செய்யதான் இந்த திராவிட மாடல் அரசு உள்ளது.

தலைக்கு மேல் கூரையின்றி வாழ்ந்த 114 குடும்பங்களுக்கு முகவரித் தந்திருக்கிறது நம் திராவிட மாடல் அரசு.மூலக்கொத்தளம் திட்டப்பகுதியில் வீடுகளைப் பெற்றுள்ள அவர்களின் மகிழ்ச்சியில் நாமும் மகிழ்ந்தோம். புதுவீட்டில் குடியேறும் அவர்களின் வாழ்க்கை சிறக்கட்டும்.

மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், இலவச பேருந்து பயணம், காலை உணவு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களால் வறுமை ஒழிப்பு, மகளிர் முன்னேற்றம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 13 துறைகளில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. திராவிட மாடல் அரசின் திட்டங்களை பயனாளிகளான நீங்கள்தான் மக்களிடம் இருந்து செல்லவேண்டும். இந்த அரசின் விளம்பர தூதர்கள் நீங்கள்தான்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”மினி டைடல் பூங்காக்கள் மூலம் சொந்த ஊர்களிலேயே இளைஞர்களுக்கு வேலை” : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பெருமிதம்!