Tamilnadu
“இவர்களின் தியாகத்தால்தான் இன்று நாம் படித்து முன்னேறுகிறோம்...” - கனிமொழி எம்.பி நெகிழ்ச்சி !
திராவிடப்பள்ளி 5 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்று (21/09/2024) திருச்சி கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. கலந்துகொண்டு, நான்காம் ஆண்டு தேர்வில் சிறப்பாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு, தி.மு.கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே. என்.நேரு தலைமை தாங்கினார்.
திராவிடப்பள்ளி முன்னாள் மாணவர்களின் ஓரங்க நாடகம் நடைபெற்றது. திராவிட இயக்கத் தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் விளக்க உரையாற்றினார். இந்த விழாவில், திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, திருச்சி வடக்கு காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., திருச்சி மாநகர மேயர் அன்பழகன், , திமுக தலைமை கொறடா கோவி செழியன், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார், திராவிடப்பள்ளி தலைமை ஒருங்கிணைப்பாளர் மா.உமாபதி, திராவிடப்பள்ளி இணை ஒருங்கிணைப்பாளர் கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இந்த விழாவில் கனிமொழி எம்.பி பேசியதாவது, “இன்று இந்த நாடு, சமூகம், உலகம் என்பது ஒரு பாதையை நோக்கி ஓடிகொண்டிருக்க கூடிய நிலையில், இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்க கூடியவர்கள் அதிகாரத்தை மற்றவர்கள் மீது திணிக்க கூடிய மதவாத அரசியலை, சாதி அரசியலை, பிரிவினை அரசியலை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் சூழலில் இங்குள்ள அத்தனை பேரும் நின்று கொண்டிருக்கிறோம். சாதி, மத அரசியல் கொள்கையை நாம் ஏன் எதிர்க்கிறோம் என்றால், எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு தான் நாம் இங்கு வந்து நிற்கிறோம்.
அதே திருவாங்கூரில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த பெண்கள், குறிப்பிட்ட வயதிற்கு பிறகு அவர்களுடைய மார்பிற்கு ஒரு வரி விதிக்கப்பட்டது. அந்த சகோதரிகள் சாதாரணமான ஒரு ஏழை குடும்பத்தின் பிண்ணணியை சேர்ந்தவர்கள். ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் அவர்களுடைய வீடுகளுக்கு சென்று அமர்ந்து வரி வசூல் செய்தனர். ஒருகட்டத்திற்கு மேல் அவர்களால் அதை தாங்கவும் முடியவில்லை. வரி செலுத்துவதற்கு காசும் இல்லை. அவ்வளவு வறுமை. அதை எதிர்த்து நங்கேலி என்ற பெண்ணின் வீட்டு வாசலில் நின்று உன்னுடைய மார்பகத்திற்கான வரியை தர வேண்டும் என்று சொன்ன போது அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை. வீட்டிற்கு உள்ளே சென்றவள் ஒரு வாழை இழையில் தன்னுடைய இரண்டு மார்பகங்களையும் வெட்டி வைத்து, அதை போதுமா என்று கூறி அரசு அதிகாரி கையில் கொடுத்து, சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இத்தனை விலை கொடுத்து தான் நாம் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளோம். அவர்களின் தியாகம் தான் இன்று நாம் படிக்கவும், பெண்கள் வாழ்வில் முன்னேறவும் காரணமாக இருந்துள்ளது. இன்று எல்லோருடைய கையிலும் எல்லாம் இருக்கிறது.
ஒன்றிய அரசானது இன்று ஒரு கல்வி கொள்கையை கொண்டு வந்து அதை திணிக்க பார்க்கிறார்கள். அவர்கள் இன்னும் 30 வருடம் கழித்து எந்த விகிதத்தில் கல்லூரிக்கு போகும் மாணவர்கள் பெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதை எப்போதோ கடந்து விட்டது தமிழ்நாடு. புதிய கல்விகொள்கையை நாம் எழுதி அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பள்ளியில் மாணவர்கள் இல்லை என்றால் பள்ளிக்கூடங்களை மூடி மாணவர்கள் எல்லாரையும் ஒரு இடத்தில் கொண்டுவந்து சேர்க்க வேண்டுமாம், தமிழ்நாடு ஒரு மாணவனோ, மாணவியோ இருந்தாலும் கூட பள்ளி இயங்கும் நாடு தமிழ்நாடு, அந்த குழந்தைக்கும் கல்வி போய் சேர வேண்டும்.
ஒரு குக்கிராமத்தில், அது மலையில இருந்தாலும், எங்க இருந்தாலும், பள்ளியை உருவாக்கி அந்த மாணவர்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று நினைப்பது தமிழ்நாடு, அது தான் திராவிடம். ஒரு காலகட்டத்தில் பெண்களை வெளிஊர்களுக்கு படிக்க அனுப்பி வைக்கமாட்டார்கள். பள்ளி முடிப்பதே பெரிய விஷயம், ஆண்களாக இருந்தாலும் வெளியூரில் சென்று படிப்பதும் சிரமம் தான், வசதி வாய்ப்பு இல்லாத காரணங்களால் இதுபோன்ற சூழல் இருந்தது. அதனால் நீ போய் வெளியே சென்று படிக்க வேண்டாம் நீ உன்னுடைய ஊருக்கு அருகிலேயே போய் படிக்க கல்லூரியை கொண்டு வருகிறேன் என்று கொண்டு வந்தவர தலைவர் கலைஞர் தான்.
வசதி இல்லை என்று படிக்க அனுப்பாமல் இருக்க கூடாது என்ற நிலை மாறி 50 சதவீதத்தை தாண்டிய மாநிலமாக தமிழகம் இருப்பதற்கு காரணம் திராவிட தலைவர்கள் தான். இதெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டும் எல்லாருடைய தியாகம், திட்டங்கள், சிந்தனைகள் எல்லாம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சுயமிரியாதை, சாதி சான்றிதழ் என்பது உன்னுடைய சாதி என்ன என்பதை தெரிந்துகொள்வதற்காக அல்ல, மாறாக உனக்கு மறுக்கப்படும் உரிமைகள், சலுகைகள் உனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காக சாதி சான்றிதழ், இதற்காக தான் திராவிட பள்ளியை தொடங்கி சுப.வீ உள்ளிட்டவர்கள் நடத்தி வருகின்றனர்.
சமூகத்தில் உரையாடல்கள் குறைந்து கொண்டே இருக்கிறது. யாரும், யாருடைய கருத்தையும் சொல்ல முடியாது. ஒருவர் சொல்லும் கருத்து பெரும்பான்மையான சமூகத்தின் மனதை புண்படுத்துவதாக கூறுகின்றனர். ஆனால் அவர்கள் தமிழ்நாட்டை புண்படுத்தும்படி பேசுவார்கள். உதாரணத்திற்கு தமிழ்நாடு என்று சொல்லக்கூடாது என்று கூறினார்கள். நமக்கு புண்படவில்லையா? பெண்களுக்கு எதிராக கருத்துகள் சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் பாஜக பெண்களுக்கு ஒரு அநீதி இழைக்கப்படும்போதும், பாலியல் வன்முறை நடக்கும் போதும் அவர்கள் சொல்லும் கருத்துக்கள் பெண்கள் ஏன் செல்போன் வைத்திருந்தார்கள்.
எத்தனையோ போராட்டங்களுக்கு பிறகு பெண்கள் அடைந்திருக்கும் சுதந்திரம், ஒரு போராட்டத்திற்கு பிறகு பெண்கள் நீங்களே உங்களை ஆடைகளை தெரிந்துகொள்ளும் சுதந்திரம், படிப்பதற்கு சுதந்திரம், பேசுவதற்கு சுதந்திரம் என்று இன்று நாம் அனுபவிக்கும் அனைத்தும் பெரியார் சொன்னது போல் உன்னுடைய உடையை உனக்கு வசதியான உடையை நீ தீர்மானி. உனக்கு முடி வளர்க்க வேண்டும் என்றால் வளர்த்துகொள், வெட்ட வேண்டும் என்று நினைத்தால் வெட்டிவிடு, எந்த தடையும் உனக்கு இல்லை.
அடிப்படையிலேயே பெண்கள் மீது திணிக்கப்படும் ஒன்று ஒரு ஆண் உன்னை எப்படி பார்க்க வேண்டும் என்று தீர்மானிப்பது உன்னுடைய பொறுப்பு என்று சொல்வார்கள். இதைவிட ஒரு பொய் உலகத்தில் இல்லை. தயவு செய்து பெண்களுக்கு ஆடை கட்டுபாடுகள் விதிப்பதை விடுங்கள். நீ என்ன உடுத்துகிறாய் என்பதில் ஆரம்பிக்கிறது உன்னுடைய உரிமை, சுதந்திரம், அதன்பிறகு தான் மற்ற எல்லா முடிவுகளும். பெண் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதை வைத்து தான் எல்லாம். அதேபோல் ஆண்களும் இதை புரிந்துகொள்ள வேண்டும். பெண்களை நாம் வாழ விட வேண்டும். அவர்களுடைய முடிவுகளை அவர்கள் எடுக்க விட வேண்டும்.
ஒன்றிய அரசு 33 சதவீதம், பெண்கள் மசோதா கொண்டுவந்தார்கள். அது எப்போது வரும், சட்டமாக இயற்றப்படும் என்ற கண்துடைப்பு இடஒதுக்கீடு மசோதா தான் பெண்களுக்கு விதிக்கப்பட்ட விதியாக இருக்கிறது. அதை உடைக்கும் விதமாக தைரியமாக உன்னுடைய தடையை எதிர்த்து முன்னேறு என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள், வேறு எந்த தலைவரும் பெண் உரிமையை இந்த அளவிற்கு தயக்கம் இல்லாமல் பேசியது இல்லை.
சாதி என்பதை போன்ற பொய் இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை. மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்கா தான், 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஈவ் ஜீன் தான் உலகம் முழுவதும் வாழ்ந்து கொண்டு இருக்கும் மனித இனங்கள் மரபியல் தொடர்பு இருக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் உருவாகி பரவியதில் எந்த இடத்தில் சாதி வந்தது.” என்றார்.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!