Tamilnadu

திராவிட மாடல் ஆட்சியில் மருத்துவத் துறையில் மலைப்போல் சாதனைகள் : 3 ஆண்டுகளில் 545 விருதுகள்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் தரமான மருத்துவ வசதிகள் வழங்கப்பட்டாக வேண்டும் என்னும் வைராக்கியத்துடன் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய பல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள். அத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு மகத்தான முறையில் பயனளித்து, தமிழ்நாட்டிற்குப் புகழ் சேர்த்து வருகின்றன.

மலை கிராம மக்களுக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட மலைப் பகுதிகளிலுள்ள கிராமங்களில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் 15 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று, 8 கிராமங்களில் மக்களைச் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளைக் கேட்டறிந்தார். அதுவரை அந்த மலைப்பகுதிக்கு எந்த ஒரு அமைச்சரும் அதிகாரியும் சென்று நேரடியாக மக்களைச் சந்தித்ததில்லை.

தொலைதூரக் கிராம மக்கள் மருத்துவர்களைத் தேடி வரவேண்டியதில்லை; அந்த மக்களைத் தேடி மருத்துவர்கள் சென்று மருத்துவ உதவிகளை வழங்குவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், "மக்களைத் தேடி மருத்துவம்" என்னும் மகத்தான திட்டத்தை உருவாக்கி

கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளிக்கு 5.8.2021 அன்று நேரடியாகச் சென்று அத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். அந்நாளில், அந்த மலை கிராமங்களில் இரண்டு கால்களையும் இழந்த ஒருவருக்குச் செயற்கைக் கால்களை வழங்கி, அங்கே ஒரு புதிய 108 ஆம்புலன்ஸ் வசதியையும் தொடங்கி வைத்தார்கள். அதன் தொடர்ச்சியாகக் கடந்த மூன்றாண்டுகளில் இத்திட்டத்தின் வாயிலாக 632 கோடியே 80 இலட்சம் ரூபாய்ச் செலவில் 1 கோடியே 85 இலட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள். இது, இத்திட்டத்தின் வெற்றிக்குக் கிடைத்துள்ள சான்றுகள் ஆகும்.

இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48–திட்டம்

நாடு முழுவதும் சாலை விபத்துகளில் உயிர்கள் பல பலியாகும் செய்தி பத்திரிகைகளில் வந்தவண்ணம் உள்ளன. தமிழ்நாட்டில் இத்தகைய சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்து உயிர்ப்பலி நேராமல் காப்பாற்றும் நோக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உருவாக்கப்பட்ட புதிய திட்டம் இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும் 48 திட்டம். சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளைக் குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளைத் தடுத்தல் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்திடும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 18.12.2021 அன்று மேல்மருவத்தூர் சென்று இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள். இத்திட்டத்தின்கீழ் 237 அரசு மருத்துவமனைகள், 455 தனியார் மருத்துவ மனைகள் என மொத்தம் 692 மருத்துவமனைகளில் மருத்துவ சிகிச்சைகள் வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதுவரை இத்திட்டத்தின் மூலம் 2.25 இலட்சம் பயனாளிகளுக்கு உடனடி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர்களின் இன்னுயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன.

சாலை விபத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டுசென்று சேர்த்து உயிர்காக்கும் திருப்பணியில் ஈடுபட்டோரை ஊக்குவித்து, அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.5,000 ஊக்கப் பரிசு வழங்கி, அவருக்கு "நற்கருணை வீரன்" எனும் பட்டமும் வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்துகிறார்கள்.

தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் திட்டம்

முதலமைச்சர் அவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் இந்த நாட்டின் வளர்ச்சிக்குத் துணைபுரிவதில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். அவர்களின் நலன்களைப் பாதுகாத்திட வேண்டும் என்னும் சிந்தனைகளுடன் தொழிலாளர்களைத் தேடி மருத்துவம் என்கிற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளார்கள். அத்திட்டத்தைத் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரில் ஹூண்டாய் மொபிஸ் தொழிற்சாலையில் 9.1.2024 அன்று தொடங்கிவைத்தார்கள்.

இத்திட்டத்தின் மூலம் இதுவரை 711 தொழிற்சாலைகளில் 5,27,000 பணியாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, 26,861 பணியாளர்கள் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வருமுன் காப்போம் திட்டம்

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வருமுன் காப்போம் திட்டத்தை 2007 ஆம் ஆண்டில் மிகச் சிறப்பான திட்டமாகத் தமிழ்நாட்டில் முன்னெடுத்தார்கள். கடந்த ஆட்சியின் 10 ஆண்டு காலத்திலும் இத்திட்டம் புறக்கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அந்த வருமுன் காப்போம் திட்டம் அளித்த பயன்களை மனதில் கொண்டு, "கலைஞரின் வருமுன் காப்போம்” என்கின்ற திட்டமாகப் பெயர் மாற்றி; மீண்டும் செயல்படுத்தி வருகிறார்கள். இத்திட்டத்தின்கீழ் ஒவ்வொரு ஒன்றியத்திலும் 3 இடங்களிலும், மாநகராட்சிப் பகுதிகளில் 4 இடங்களிலும், சென்னையைப் பொறுத்த வரையில்

15 இடங்களிலும் என்று ஆண்டொன்றுக்கு 1,250 முகாம்கள் நடத்த வேண்டுமென்று திட்டமிட்டு; கடந்த 3 ஆண்டுகளில் 4,042 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன இதுவரை இத்திட்டத்தில் 36 இலட்சத்து 69 ஆயிரத்து 326 பேர் பயன்பெற்றுள்ளனர்.

புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள்

கிராமப்புற மக்களுக்கு அடிப்படை மருத்துவ உதவிகள் அனைத்தையும் வழங்குவதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி, புதிதாக 25 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 25 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 100 ஆரம்ப சுகாதார நிலையங்களை அமைத்திட நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறுநீரகப் பாதிப்புகளை முன்கூட்டியே அறிந்து உரிய மருத்துவ வசதிகளை வழங்கி மக்களைப் பாதுகாப்பதற்காக உருவாக்கிய திட்டம் சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டம். இத்திட்டம் சேலம் மாவட்டம் காடையாம்பட்டியில் 2023 ஜூலை திங்கள் 10 ஆம் நாள் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 56 இலட்சத்து 7 ஆயிரத்து 385 பேர் பயனடைந்துள்ளனர்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு - நாய் கடிகளுக்கு மருந்துகள்

நாய்க் கடி என்பது கிராமப்புறங்களில் அதிகரித்து வருகிறது. அதுபோல், தோட்டப்புறங்களில் பாம்புகளாலும் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே, மலை கிராமங்கள் உட்பட அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பாம்பு கடிக்கும், நாய்க் கடிக்கும் மாத்திரை மருந்துகள் இருக்க வேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அவர்கள் பாம்பு கடிக்கும், நாய்க்கடிக்குமான மருந்துகளை அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இருப்பு வைக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்கள். அதன் பயனாக, பாம்பு கடிக்கான மருந்து (Anti-Snake Venom) நாய்க் கடிக்கான மருந்து (Anti-Rabies Vaccine) இரண்டும் இன்றைக்கு 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் வைக்கப்பட்டிருக்கின்றன. இது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சாதனை என்பதுடன் அவர் உள்ளத்தில் நிறைந்திருக்கும் கருணை எல்லையற்றது என்பதையும் புலப்படுத்துகிறது.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஏழை எளியோரும் தனியார் மருத்துவமனைகளிலும் உயர் சிகிச்சைகள் பெற உதவும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை 2009ஆம் ஆண்டில் தொடங்கி வைத்தார்கள். அவசர மருத்துவ ஊர்தி 108இன் துணையோடு தமிழ்நாட்டில் கலைஞர் காப்பிட்டுத் திட்டத்திற்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு இத்திட்டம் குறுகிய காலத்தில் மக்களைக் கவர்ந்து மாபெரும் வரவேற்பைப் பெற்றது: என்றாலும், இத்திட்டம் கடந்த ஆட்சியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் எனப் பெயர் மாற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இத்திட்டத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது. கடந்த ஆட்சிக் காலத்தில் இத்திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட சலுகைகளைவிட முதலமைச்சர் அவர்களால் கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுகின்றன. அதன்பயனாக, கடந்த ஆட்சிக்காலத்தில் 970 மருத்துவமனைகளில் மட்டுமே செயல்படுத்தப்பட்ட இத்திட்டம் தற்போது 1,834 மருத்துவ மனைகளில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் தற்போது 1 கோடியே 47 இலட்சம் குடும்பங்களை வாழ்வித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் முதன்முதல் தொடங்கப்பட்ட உடல் உறுப்பு தானம் திட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2008 ஆம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தித் தொடங்கப்பட்டது. இந்த உடல் உறுப்பு தானத் திட்டம் விபத்து அல்லது வேறு காரணங்களால் மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல்களிலிருந்து, அவர்களுடைய குடும்பத்தார் அனுமதியுடன் இதயம் முதலான உறுப்புகள் எடுக்கப்பட்டு அவசரமாகத் தேவைப்படுவோர்க்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. இதற்கெனத் தனி ஆணையம் ஒன்றையும் அமைத்து, உரிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இத்திட்டத்தின் மேன்மையைக் கருதி உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என்று 23.9.2023 அன்று அறிவித்து ஊக்கம் தந்து, அரசு மரியாதை அளிக்கப்படுகிறது.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் 7.9.2024 அன்று சென்னை இராஜீவ் காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்லாவரத்தைச் சேர்ந்த முரளி என்பவர் மூளைச்சாவு அடைந்த அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதைத் தொடர்ந்து அவரது திருவுடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வு மூளைச்சாவு அடைந்த உறுப்புக் கொடையாளிகளுக்கு அரசு சார்பில் செய்யப்படும் 250வது அரசு மரியாதை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை 467 நன்கொடையாளர்களிடமிருந்து 223 இதயம், 292 நுரையீரல், 409 கல்லீரல், 810 சிறுநீரகம் என மொத்தம் 2,789 உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டு, பலர் வாழ்வு பெற்றுள்ளனர். உடல் உறுப்புகளை மாற்றுவதில் இந்தியாவில் முதன்முதல் சட்டப்படி உருவாக்கப்பட்ட திட்டம் என்பது தமிழ்நாட்டிற்குள்ள தனிப் பெருமையாகும்.

மருத்துவப் பணியாளர்கள் நியமனங்களிலும் தமிழ்நாடு காட்டும் புதிய வழி

மக்களுக்கு அரசு வழங்கும் மருத்துவ உதவிகள் குறையின்றி முறையாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காக புதிய மருத்துவமனைகள் ஏற்படுத்தப் படுகின்றன. உயர்தர மருத்துவ சாதனங்களும் வழங்கப்படுகின்றன. தேவைப்படும் இடங்களில் மருத்துவப் பணியாளர்கள் தொடர்ந்து நியமனம் செய்யப்படுகின்றனர். அந்த வகையில், மருத்துவப் பணியாளர்கள் தேர்வு வாரியம் மூலம் மூன்றாண்டுகளில் 1,947 மருத்துவர்கள் உட்பட 3,238 பேர் பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்குப் பணி நியமனம் செய்யப்படுகிறபோதே கலந்தாய்வு நடத்தப்பட்டு; அவர்கள் விரும்புகிற இடங்களுக்குப் பணி ஆணைகளை வெளிப் படைத்தன்மையோடு தந்துகொண்டிருக்கிற ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

மேலும், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த முறையில் பணியாற்றி வந்த 1,911 செவிலியர்களுக்குக் காலமுறை ஊதியத்தில் பணிநியமனம் வழங்கப் பட்டுள்ளது.

அதே போல, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தற்காலிக முறையில் பணியாற்றி வந்த 1,412 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலான செவிலியர்களாகப் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத் தக்கதாகும்.

கிண்டி மருத்துவமனை உலக வரலாற்றில் இல்லாத ஒரு சாதனைச் சின்னம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்று, அறிவித்து நிறைவேற்றிய திராவிட மாடல் அரசின் மகத்தான ஒரு சாதனைச் சின்னம் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை. இந்த கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 387 கோடியே 6 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தந்து, மிகப்பெரிய அளவில் பொதுமக்களுக்குப் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.

உலக வரலாற்றில் ஒரு மருத்துவமனை கட்டி ஓராண்டிற்குள் 3 இலட்சத்து 13 ஆயிரத்து 864 பேர் அதன்மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சாதனையாகும். அதோடு மட்டுமல்ல, இந்த மருத்துவமனையிலிருக்கிற உபகரணங்களைப்போல் இந்தியாவில் இருக்கிற 36 மாநிலங்களில் எந்த ஒரு அரசு மருத்துவமனையிலும் இல்லை என்பது இம்மருத்துவமனையின் சிறப்புக்கு ஒரு முக்கியக் காரணமாகும். Robotic Surgery equipment, 1.5 Tesla BioMatrix Auto MRI, Double Balloon Enteroscopy, Holmium Laser போன்ற அதிநவீன கருவிகள், அதிநவீன 3D மூளை அறுவைச் சிகிச்சை Microscope போன்ற கருவிகள் இந்தியாவில் வேறு எந்த அரசு மருத்துவமனையிலும் இல்லை. இந்தக் கருவிகள் எல்லாம் கலைஞர்

நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் மக்களுக்கு மிகப் பெரிய அளவிலான மருத்துவச் சேவைகளைச் செய்து கொண்டிருக்கின்றன.

மேலும், திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 1,018.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 19 அரசு மருத்துவமனைகளை அரசுத் தலைமை மருத்துவமனைகளாகவும், 6 அரசு மருத்துவமனைகளை அரசுத் தலைமை மருத்துவமனைகளுக்கு இணையாகவும் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெறுகின்றன.

நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்களும், துறையின் செயலாளரும் மருத்துவத்துறைப் பணிகள் தொடர்பாக ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றிருந்தபோது, அங்கே 8 கிலோ மீட்டர் நீளத்திற்கான Health Walk Road ஒன்று அவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Health walk road எதற்காக அங்கே 8 கிலோ மீட்டர் நீளத்திற்குச் சாலை அமைத்திருக்கிறார்கள் என்று கேட்டபோது, 8 கிலோ மீட்டர் நடந்தால் 10,000 அடிகள் வரும். 10,000 அடிகள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு நாளும் நடப்பது என்பது அவர்களுடைய உடல் நலனுக்கு நல்லது என்று அங்கே கூறப்பட்டுள்ளது. முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு இந்தச் செய்தி வந்ததைத் தொடர்ந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒரே ஒரு சுகாதார நடைப்பயிற்சி சாலைதான் (Health Walk Road) இருக்கிறது. தமிழ்நாட்டில் 38 மாவட்டங்களிலும் சுகாதார நடைப்பயிற்சி சாலைகளை அமையுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.

அந்த வகையில், 38 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள 38 சாலைகளை 4.11.2023 அன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து இன்று அந்தச் சாலைகள் பயன்பாட்டில் உள்ளன.

பன்னாட்டு மருத்துவ மாநாடு

தமிழ்நாட்டின் மருத்துவத் துறைக்குப் பெருமை சேர்க்கும் வகையில் 19.1.2024 முதல் 21.1.2024 வரை இந்திய வரலாற்றில் வேறு எந்த மாநிலத்தின் மக்கள் நல்வாழ்வுத் துறையும் செய்யாத அளவிற்கு 3 நாட்களுக்கான பன்னாட்டு மருத்துவ நிபுணர்கள் பங்குபெற்ற, "மருத்துவத்தின் எதிர்காலம்" எனும் தலைப்பில், "கலைஞர் நூற்றாண்டு சர்வதேச மருத்துவ மாநாடு" 2024 சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், கத்தார், ஆஸ்திரேலியா, கனடா முதலிய

70 நாடுகளிலிருந்து 11,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டார்கள். அதில் 28 புகழ்பெற்ற மருத்துவ வல்லுநர்கள் உரையாற்றினார்கள்.

இந்தியா முழுவதிலும் இருந்து 150 மருத்துவ வல்லுநர்கள் கலந்துகொண்ட அந்த மாநாட்டில் 625-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் அளிக்கப்பட்டு; அதன்மூலம் எதிர்கால மருத்துவ ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவியாக அமைந்து வழிகாட்டுகிறது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.

கண் தானத்தில் சிறந்து விளங்கும் தமிழ்நாடு

20 கண் வங்கிகள் மூலம் 21,818 கண்கள் தானமாகப் பெறப்பட்டு, கண் கருவிழி மாற்று சிகிச்சைக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண் தானம் தொடர்பாக இணைய செயலி உருவாக்கியதன் மூலம் கடந்த 2023 ஆம் ஆண்டில் மட்டும் ஏறத்தாழ 10,000 கண் கொடையாளர்கள் தங்கள் கண்களைத் தானம் செய்வதற்குப் பதிவு செய்துள்ளனர்.

கண் மருத்துவப் பிரிவில் மேலும் சிறப்பான சேவைகள் அளித்திட திராவிட மாடல் ஆட்சியில் தஞ்சாவூர் அரசு இராசாமிராசுதார் மருத்துவமனையில் மண்டல கண் சிகிச்சை மையம் சுமார் 16.5 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டில் உள்ளது. திருவள்ளூர், தென்காசி, திருப்பத்தூர் முதலிய துணை மாவட்ட மருத்துவமனைகள், தாம்பரம், திருப்பெரும்புதூர் கண் வங்கிகள் முதலியவற்றுக்கு 7.25 கோடி ரூபாய்ச் செலவில் உயர்தர கண் மருத்துவக் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. சென்னை மண்டல கண் சிகிச்சை நிலையத்தின் இருநூற்றாண்டு விழா நினைவாக ரூ.65.60 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டப்பட்டு 8 கோடி ரூபாய்ச் செலவில் உயர்தர உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன.

அரசு மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள்- உபகரணங்கள்

2021 முதல் மூன்று ஆண்டுகளில் 3,888.52 கோடி ரூபாய் மதிப்பில் மருந்துகளும், 1,875.26 கோடி மதிப்பில் மருத்துவ உபகரணங்களும் கொள்முதல் செய்யப்பட்டு அரசு மருத்துவ மனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவ முகாம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினைச் சிறப்பிக்கும் வகையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், 103 இலவசப் பன்னோக்குச் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, 1.89 இலட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளனர். சென்னையில் மட்டும் 10,083 பேர் பயன் பெற்றுள்ளனர்.இப்படி, மாவட்டந்தோறும் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டதில் 99,935 குடும்பங்கள் புதிய காப்பீட்டுத் திட்டப் பயனாளிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடமாடும் மருத்துவக் குழுக்களின் சாதனை

நடமாடும் மருத்துவக் குழு தொலைதூரக் கிராமங்களுக்குச் சென்று மருத்துவச் சேவைகள் புரிவதை ஊக்கப்படுத்திட 389 புதிய நடமாடும் மருத்துவக்குழு வாகனங்கள் 70.02 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப் பட்டுள்ளன. 396 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் 7.42 இலட்சம் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

விருது மழையில் தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மக்கள் நலனுக்காக மாண்புமிகு அமைச்சர், அதிகாரிகள், மருத்துவ வல்லுநர்கள் அனைவருக்கும் அளித்து வரும் ஊக்கம் காரணமாக தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இந்திய அளவில் பல பாராட்டுகளையும் விருதுகளையும் பெற்று வருகிறது. அந்த வரிசையில் கர்ப்பிணிப் பெண்களுக்கான ஹெபாடிடிஸ் பி சோதனை (Hepatitis B test) செய்வதில்

இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்று விருது பெற்றுள்ளது. தொலைதூர மருத்துவச் சேவையில் (Teleconsultation) தமிழ்நாட்டிற்கு முதல் பரிசு கிடைத்திருக்கிறது.

கர்ப்பிணிகளுக்கு மிகவும் தரமான சிகிச்சை அளிக்கிறது தமிழ்நாடு என்று பாராட்டப்பட்டு இந்தியாவில் சிறந்த மாநிலம் என விருது வழங்கப்பட்டுள்ளது. பள்ளி சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத் தூதுவர் திட்டத்தில் இந்தியாவில் முதல் மாநிலம் எனத் தமிழ்நாட்டிற்கு விருது கிடைத்துள்ளது.

தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அறுவை சிகிச்சையில் (National Organ and Tissue Transplant Organization) சிறந்த மாநிலம் (Best State Award) என்னும் விருதும்; தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கத்திற்குச் சிறந்த சேவை விருதும் (Best Performance State) வழங்கப்பட்டுள்ளன. இந்த விருகளுடன் மேலும் பல விருதுகளையும் பெற்றுத் தமிழ்நாடு சுகாதாரத்துறை விருது மழையில் மிளிர்கிறது.

மூன்றே ஆண்டுகளில் 545 விருதுகள்!

தேசிய தர உறுதி நிர்ணய விருது (National Quality Assurance Standards) என்கின்ற விருது 2012-ல் ஒன்றிய அரசினால் உருவாக்கப்பட்டது. அதன்மூலம், 2012 முதல் 2021 வரை ஒன்பது ஆண்டு கால முந்தைய ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு 79 விருதுகள் மட்டுமே கிடைத்துள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இத்துறைக்கு அளித்துவரும் ஊக்கம் காரணமாக மூன்றே ஆண்டுகளில் 545 விருதுகளைப் பெற்று திராவிட மாடல் ஆட்சி போற்றப்படுகிறது.

குஜராத் மருத்துவக் குழுவின் பாராட்டு

குஜராத் மாநிலத்திலிருந்து, 3.10.2023 அன்று, அந்த மாநிலத்தின்மருத்துவத்துறை இயக்குநர் டாக்டர் ராஜேஷ் வைத்யா அவர்கள் தலைமையில் 60 மருத்துவ அலுவலர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து 3 நாள்கள் தங்கி தமிழ்நாட்டின் மருத்துவக் கட்டமைப்புகளை தமிழ்நாடு முழுதும் சென்று பார்வையிட்டனர். இறுதியில், அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோது, “தமிழ்நாட்டிலிருக்கும் மருத்துவக் கட்டமைப்பு வசதி எங்கள் குஜராத் மாநிலத்திற்கு வருவதற்கு இன்னும் 20 ஆண்டுகள் ஆகும்” என்று கூறி, குஜராத் மாநிலத்தைவிட தமிழ்நாடு மருத்துவத் துறை மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது என மனதாரப் புகழ்ந்து பாராட்டினார்கள்.

மேகாலயா மருத்துவக் குழுவின் பாராட்டு

குஜராத் மாநிலத்தைத் தொடர்ந்து மேகாலயாவிலிருந்து 29 மருத்துவர்கள் உயிர்காக்கும் பேறுகால மருத்துவ சிகிச்சை முறையில் பயிற்சி பெறுவதற்காகத் தமிழ்நாட்டிற்கு வருகைபுரிந்திருந்தார்கள். அந்த 29 மருத்துவர்களுக்கும் இங்குப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு, அவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அப்போது, மேகாலயா மாநில மருத்துவத் துறை அமைச்சர், டாக்டர் மேஸல் அம்பரீன் லிண்டோ (Dr. Mazel Ampareen Lyngdoh) அவர்கள் “தமிழ்நாடு வழங்கியுள்ள இந்தப் பயிற்சியின் மூலம் எங்கள் மாநிலம் மேகாலயாவிற்கு இன்று உயிர்காக்கும் உதவிகளைச் செய்திருக்கிறது. இதற்காக, தமிழ்நாடு முதலமைச்சர் .மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்கள் மேகாலயா மாநிலமே கடமைப்பட்டுள்ளது" என்று பாராட்டினார்கள்.

Also Read: 3 ஆண்டுகளில் அரசுத் துறைகளில் வேலைக்கு சேர்ந்த 68,039 இளைஞர்கள் : அசத்தும் திராவிட மாடல் அரசு!