Tamilnadu
தேவதானம் திருக்கோயிலுக்கு சொந்தமான 103 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு... - அறநிலையத்துறை அதிரடி!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் அறிவுறுத்தலின்படியும் இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகக் கட்டுபாட்டிலுள்ள திருக்கோயில்களுக்குச் சொந்தமான சொத்துக்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இன்று (19.09.2024) விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தேவதானம், அருள்மிகு நச்சாடை தவிர்தருளிய சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான ரூ. 20.66 கோடி மதிப்பிலான 103 ஏக்கர் 47 சென்ட் நன்செய் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தேவதானம், அருள்மிகு நச்சாடை தவிர்தருளிய சுவாமி திருக்கோயிலானது இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் செயல் அலுவலர் மற்றும் பரம்பரை அறங்காவலரால் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. இத்திருக்கோயிலுக்கு கோவிலூர் கிராமத்தில் 103 ஏக்கர் 47 சென்ட் பரப்பளவுள்ள நஞ்சை நிலங்கள் தேவதானம், அம்மையப்பா விவசாய குத்தகைதாரர் கூட்டுறவு சங்கத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தது.
அச்சங்கத்தினர் நீண்ட காலமாக திருக்கோயிலுக்கு குத்தகை செலுத்தாத காரணத்தினால், மேற்படி குத்தகையினை செலுத்தக் கோரி மதுரை மாவட்ட வருவாய் நீதிமன்றத்தில், வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு, மதுரை வருவாய் நீதிமன்ற தனித்துறை ஆட்சியர் அவர்களால், 20.01.2015 அன்று வழங்கப்பட்ட உத்திரவில், குத்தகை பாக்கியை மூன்று மாத காலத்திற்குள் செலுத்தத் தவறும்பட்சத்தில் தபசில் சொத்திலிருந்து எதிர்மனுதாரர்கள் வெளியேற்றப்படுவர் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேற்படி உத்தரவினை எதிர்த்து, அம்மையப்பா விவசாய குத்தகைதாரர் கூட்டுறவு சங்கத்தின் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவின் மீது 11.08.2021 அன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், குத்தகை பாக்கியில் 50% தொகையினை வைப்பீடு (டெபாசிட்) செய்து வழக்கினை தொடர உத்திரவிடப்பட்டும், இது தொடர்பாக மேற்படி எதிர்மனுதாரர்களுக்கு இத்திருக்கோயில் செயல் அலுவலரால் பலமுறை அறிவிப்புகள் அனுப்பப்பட்டும் எதிர்மனுதாரர்களால் வைப்பீடு ஏதும் செலுத்தப்படவில்லை.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் அவர்களின் உத்தரவின்படியும், மேற்படி திருக்கோயில் பரம்பரை அறங்காவலரின் 15.07.2024 மற்றும் 09.09.2024 நாளிட்ட தீர்மானத்தின் படியும் இன்று (19.09.2024) விருதுநகர் மாவட்ட உதவி ஆணையர் டி. வளர்மதி அவர்கள் தலைமையில் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் ஆகியோரின் உதவியுடன் திருக்கோயிலுக்குச் சொந்தமான 103 ஏக்கர் 47 சென்ட் பரப்பளவுள்ள நன்செய் நிலம் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டு, திருக்கோயில் வசம் சுவாதீனம் எடுக்கப்பட்டது. மேற்படி சொத்தின் மதிப்பு தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 20.66 கோடியாகும்.
இந்நிகழ்வின்போது தனி வட்டாட்சியர்கள் (ஆலய நிலங்கள்) க.மாரிமுத்து (மதுரை), சு.க.சிவக்குமார் (விருதுநகர்), திருக்கோயில் பரம்பரை அறங்காவலர் துரை. ரத்னகுமார், செயல் அலுவலர் க.கலாராணி மற்றும் சிறப்பு பணி செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் உடனிருந்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!