Tamilnadu
வடலூர் வள்ளலார் பெருவெளி நிலத்தில் மருத்துவமனை : அறநிலையத்துறைக்கு அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு!
வடலூர் வள்ளலார் கோவில் பெருவெளி அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்தா மருத்துவமனை கட்டுமான பணிகளை அக்டோபர் இரண்டாவது வாரத்துக்குப் பின் மேற்கொள்ள அறநிலையத்துறைக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்குகள், நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு சொந்தமான 34 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்துள்ள, உரிமை கோரும் 269 பேரின் விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த 269 பேரையும் வழக்கில் எதிர்மனுதாரர்களாக சேர்த்த நீதிபதிகள், அக்டோபர் 3ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.
மேலும், அவர்களை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசின் அனுமதியில்லாமல் வள்ளலார் தெய்வ நிலையத்துக்கு சொந்தமான நிலங்களை தநி நபர்களுக்கு விற்பனை செய்த கோவில் அறங்காவலர்கள், ஊழியர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டனர்.
அறநிலையத்துறை தரப்பில், பெருவெளி அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள பகுதியில் உள்ள 10.44 ஏக்கர் நிலத்தில், 4 ஆயிரத்து 40 சதுர மீட்டர் பரப்பில், முதியோர் இல்லம், சித்தா மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற உத்தரவின் காரணமாக அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு கட்டுமானங்கள் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மனுதாரர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போது குறுக்கிட்ட நீதிபதிகள், பெருவெளிக்கு அருகில் கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற எந்த மக்கள் இயக்கத்தையும் மனுதாரர்கள் மேற்கொள்ளவில்லை என்றனர். மேலும், ஜோதி தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும், இல்லாவிட்டால் கூட்ட நெரிசல் போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடும் என்றனர்.
தொடர்ந்து, பெருவெளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இடத்தில் இருந்து ஜோதி தரிசனம் செய்ய முடியாது எனவும், இடையில் கட்டிடங்கள் மரங்கள் உள்ளன. கடலூர் - விருதாச்சலம் சாலையும் செல்வதால், இந்த பகுதியில் கட்டுமானம் மேற்கொள்வதால் பக்தர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த இடத்தில் கட்டுமானங்கள் மேற்கொள்வதற்கு ஆட்சேபம் தெரிவிப்பதற்கான காரணங்களை அக்டோபர் 3ம் தேதிக்குள் தெரிவிக்க மனுதாரர்களுக்கு உத்தரவிட்டனர்.
பெருவெளியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்தா கிளினிக் உள்ளிட்ட கட்டுமான பணிகளை அக்டோபர் 2-வது வாரத்தில் துவங்க அறநிலைய துறைக்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை அக்டோபர் 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!