Tamilnadu

”பெரியாரின் கனவுகளை நிறைவேற்றும் திராவிட மாடல் அரசு” : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில், தந்தை பெரியார் நினைவுச் சொற்பொழி நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்திற்காக தனது 95 வயது வரை உழைத்தவர் தந்தை பெரியார். இவரது கொள்கைகள் எந்த காலத்திற்கும் பொருந்தக்கூடியது.

படித்தாலே தீட்டு என்று சொன்ன காலம் இருந்தது. பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று சொன்னார்கள். ஆனால் இன்று இதெல்லாம் உடைத்தெறியப்பட்டு இருக்கிறது. இதற்கு காரணம் யார் என்றால் அது தந்தை பெரியார்தான்.

பெண்கள் விடுதலைக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். இவரது பேச்சுக்கு செயல்வடிவம் கொடுத்தவர்கள் அண்ணாவும், கலைஞரும். இன்று இவர்களது வழியில் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

எல்லோரும் வேலைக்கு செல்ல வேண்டும் என்று பெரியார் கனவு கண்டார். அவரது கனவை நினைவாக்க ’நான் முதல்வன்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பெரியார் இல்லை என்றால் நாம் யாரும் இல்லை என்று அண்ணா சொன்னார். என்னை எத்தனையோ பேர்களை சொல்லி புகழ்ந்தாலும் பெரியார் வழியை பின்பற்றுகிற மானமிகுந்த ஒரு சுயமரியாதைக்காரன் என்று சொல்வதுதான் எனக்கு பெருமை என்று கலைஞர் அடிக்கடி சொல்வார்.

பெரியார் நம்மைவிட்டு பிரிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இருந்தாலும் அவரது கருத்துக்களும் சிந்தனைகளும் இன்றைக்கு நமக்கு பொருந்தக்கூடியதாக இருக்கிறது. இன்று அல்ல என்றுமே பெரியாரின் கருத்துக்கள் நமக்கு பொருந்தும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: “சம உரிமை கொள்கையைக் கொண்டு 75 ஆண்டுகளாக செயல்படும் தி.மு.க!” : அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்!