Tamilnadu

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்கள் பத்திரமாக மீட்பு - தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கை !

உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஆதி கைலாஷ் என்ற பகுதிக்கு தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 12 பெண்கள், 18 ஆண்கள் என 30 பேர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்த சூழலில் கடந்த 15-ம் தேதி தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக திரும்பி வர இருந்த தமிழர்கள், நிலச்சரிவு காரணமாக கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

தொடர்ந்து அந்த பகுதி மிகவும் ஆபத்தானது என்பதால், அவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் தங்கி, தங்கள் குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு களத்தில் இறங்கியது.

அதன்படி தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உத்தரகாண்ட் மாநில அரசு அதிகாரிகளை தொடர்பு கொண்டு மீட்புப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. இதனிடையே மீட்பு பணிகளில் முதலில் 15 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக உரையாடினார். அவர்களை தைரியமாக இருக்கச் சொல்லி, நம்பிக்கைக் கொடுத்தார்.

இதையடுத்து மீட்கப்பட்டவர்கள் முதலமைச்சருக்கு வீடியோ வெளியிட்டு தங்கல் நன்றியினை தெரிவித்தனர். தொடர்ந்து அனைவரும் மீட்கப்பட்டு தமிழ்நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், நேற்று (செப்.17) இரவு விமானம் மூலம் 17 பேர் சென்னை திரும்பிய நிலையில், அங்கிருந்து அவர்கள் கடலூர் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் மீதமிருக்கும் 13 பேரும் இரயில் மூலம் இன்று (செப்.18) சென்னை திரும்பினர். சென்னை எழும்பூர் இரயில் நிலையத்தில் அமைச்சர்கள் எம் ஆர் கே பன்னீர்செல்வம், சி.வி.கணேசன், செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் தமிழ்நாடு திரும்பிய 13 பேரையும் வரவேற்றனர். தொடர்ந்து அரசு செலவில் அவர்களும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Also Read: பணியில் சேர்ந்த 4 மாதத்திலேயே இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்.. EY நிறுவனத்துக்கு தாய் உருக்கமான கடிதம் !