Tamilnadu
உத்தரகாண்ட் நிலச்சரிவு: “தைரியமா இருங்க...” - மீட்கப்பட்ட தமிழர்களிடம் ஃபோனில் பேசிய முதலமைச்சர் !
உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஆதி கைலாஷ் என்ற பகுதிக்கு நாடு முழுவதும் இருந்து புனித பயணம் பலரும் மேற்கொள்வர். அந்த வகையில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 12 பெண்கள், 18 ஆண்கள் என 30 பேர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்த சூழலில் தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த வழியாக திரும்பி வர இருந்த தமிழர்கள், நிலச்சரிவு காரணமாக கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் தொடர்ந்து நிலச்சரிவு அபாயம் இருந்து வருவதால் அவர்கள் தொடர்ந்து வருவது பாதுகாப்பு இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே புனித பயணம் மேற்கொண்ட 30 பேரும் அப்பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் தங்கி, தங்கள் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அவர்களின் உறவினர்கள் மூலமாக கடலூர் மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் ஆட்சியர் ஆகியோருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உடனடியாக தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து உத்தரகாண்ட் தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் பேசி, தமிழர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது.
தொடர்ந்து தமிழர்களின் பாதுகாப்பு தேவையான உணவு உள்ளிட்ட தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கும்படி அங்கிருக்கும் அதிகாரிகளிடம் தமிழ்நாடு அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. உத்தரகாண்டில் சிக்கியிருக்கும் தமிழர்களை மீட்கும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உத்தராகண்ட்டில் நிலச்சரிவால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் தமிழர்களிடம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, அவர்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது :
“உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்”
சிதம்பரத்தைச் சேர்ந்த அலமேலு கிருஷ்ணன் (73), பராசக்தி (70), பார்வதி (70), கோமதி (66), மலர் (54) உள்பட 15 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமிருப்பவர்களை மீட்கும் பணி விரைந்து நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!