Tamilnadu

“தமிழர்கள் தமிழ்நாடு முதலமைச்சரை தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்” - அமைச்சர் சேகர் பாபு !

சென்னை முத்தையாலுபேட்டையில் உள்ள அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவிலில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

இந்த திருக்கோவிலில் 08.06.2003 அன்று கடைசியாக குடமுழுக்கு நடத்தப்பட்டு, 21 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இன்று குடமுழுக்கு நடைபெற்றது. இந்த நிகழ்வைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”திராவிட மாடல் ஆட்சியின்ல் திருக்கோவில்களின் திருப்பணிகள் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 101 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. நாளை 26 கோவில்களில் குடமுழுக்கு நடைபெறுகிறது. நாளைய தினம் நடைபெறும் குடமுழுக்கோடு சேர்த்து 2200 திருக்கோவில்களின் குடமுழுக்கு நிறைவு பெறுகிறது.

மெட்ரோ ரயில் பணிக்காக சேமாத்தம்மன் ஆலயம் அகற்றப்பட்டது. அந்த இடத்தில் மீண்டும் இந்து சமய அறநிலைத்துறை முயற்சி செய்து திருக்கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இன்று காலை 1 கோடியே 58 லட்சம் செலவில் புதிதாக ஆதி சேமாத்தம்மன் ஆலயம் கட்டுவதற்கான திருப்பணிகளை காலையில் தொடங்கி வைத்துள்ளோம். இந்த ஆட்சி வந்த பிறகு திருக்கோவில்கள் அகற்றப்படுவதாக ஒரு போலியான பொய்யான பிம்பத்தை உருவாக்க முற்படுபவர்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

இந்த புரட்டாசி மாதம் 21 ஆம் தேதி சென்னை பார்த்தசாரதி கோவிலில் இருந்து நான்கு தவணைகளாக ஆயிரம் மூத்த குடிமக்கள் ஆன்மீகப் பயணத்திற்கு கொண்டு செல்லும் பணியும் தொடங்க உள்ளது.எங்கெல்லாம் கோவில்களில் தமிழில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று கோரிக்கை வந்தாலும் அங்கெல்லாம் தமிழில் குடமுழுக்கு நடத்தப்படுகிறது, எங்கும் தமிழுக்கு தடை இல்லை. வருகின்ற காலங்களில் இது போன்ற திருக்கோவில்களிலும் தமிழில் குடமுழுக்கு நடத்த ஏற்பாடு செய்யப்படும்” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் வானதி சீனிவாசன் தப்பித்தேன் பிழைத்தேன் என்று கோவை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர். அப்படி கோவை மண்டலத்தில் இருக்கக்கூடிய தொழிலதிபர்கள் திமுகவை ஆதரிக்கவில்லை என்றால் பாஜகவின் வேட்பாளர் நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி மண்ணை கவ்வி இருப்பார். ஆதரவு இருந்திருந்தால் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினராக ஆகியிருப்பார். கோவை மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடு மட்டுமல்ல தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை, தமிழ்நாடு முதல்வரை தலைவராக ஏற்றுக்கொண்டு உள்ளார்கள்” என்று கூறினார்

Also Read: திராவிட மாடல் அரசின் சாதனை... ஓராண்டை நிறைவு செய்த கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் - மக்கள் வாழ்த்து !