Tamilnadu

கழக பவளவிழா : முதலமைச்சர் சொன்னபடி கழக உடன்பிறப்புகளின் இல்லங்களில் பட்டொளி வீசி பறந்த இருவண்ணக் கொடி !

திராவிட முன்னேற்றக் கழகம் 1949, செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் தோற்றுவிக்கப்பட்டது. கழகத்தின் சித்தாந்தத்தை அண்ணாவின் உடன்பிறப்புகளான கலைஞர் உள்ளிட்ட மூத்தத் தலைவர்கள் மக்களிடையே கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு கலைஞர் தலைமையிலான நவீன திமுக உருவானது. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக திராவிட மாடல் அரசு நாட்டுக்கே முன்மாதிரியாக அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் திமுக தோற்றுவிக்கப்பட்ட நாள் கழக உடன்பிறப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் முப்பெரும் விழாவோடு இந்த விழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு கழகத்தின் 75-வது ஆண்டான பவள விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இந்த ஆண்டு முப்பெரும் விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

கழக பவளவிழாவை முன்னிட்டு அதற்கான இலச்சினையை (Logo) பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இதனிடையே பவள விழாவை முன்னிட்டு கழக உடன்பிறப்புகள் அவரவர் இல்லங்கள்- அலுவலகங்கள்- வணிகவளாகங்களில் கழகக்கொடியான கருப்பு - சிவப்பு இருவண்ணக் கொடியை ஏற்றிக் கொண்டாடிட வேண்டும் என்று கழகத் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

கழக பவள விழா மற்றும் முப்பெரும் விழாவை முன்னிட்டு கழகத் தொண்டர்களின் சார்பில் கழக அலுவலகங்கள் மற்றும் கழகத் தொண்டர்களின் இல்லங்கள் என அனைத்து இடங்களிலும் இருவண்ணக் கொடியை ஏற்றிப் பட்டொளி வீசிப் பறந்திடச் செய்திட வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்தநாளான இன்று, சென்னை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கழக உடன்பிறப்புகள் தங்கள் இல்லங்களில் இருவண்ணக் கொடியை ஏற்றி மகிழ்ந்தனர். அமைச்சர் எ.வ.வேலு, திருச்சி சிவா எம்.பி., உள்ளிட்ட பலரும் தங்கள் இல்லங்களில் கழகக் கொடியேற்றி மகிழ்ந்தனர்.

மேலும் கழகக் கொடியை ஏற்றியதோடு, பொதுமக்களுக்கு இனிப்பு குளிர்பானம் உள்ளிட்டவை வழங்கினர். இந்த ஆண்டின் முப்பெரும் விழா வரும் செப்.17-ம் தேதி சென்னை, YMCA மைதானத்தில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: உத்தரகாண்ட் நிலச்சரிவு: “தைரியமா இருங்க...” - மீட்கப்பட்ட தமிழர்களிடம் ஃபோனில் பேசிய முதலமைச்சர் !