Tamilnadu

திமுக 75 : பவள விழாவை முன்னிட்டு இலச்சினையை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

மக்கள் தொண்டாற்றுவதற்காக 1949, செப்.17 அன்று திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. பேரறிஞர் அண்ணாவால் உருவான இந்த கட்சி, திராவிட சித்தாந்தத்தை தமிழ்நாட்டில் வேறுன்ற வைத்ததில் முக்கிய பங்காற்றியது. அன்று தொடங்கிய திமுக, ஒவ்வொரு ஆண்டும் வளர்ச்சியை மட்டுமே கண்டு வருகிறது.

அண்ணா - கலைஞர் - மு.க.ஸ்டாலின் என அடுத்தடுத்து வந்த தலைவர்கள் இதனை மேலும் மெருகேற்றினர். ஆண்டுதோறும் அண்ணா பிறந்தநாள், திமுக உருவான நாள், பெரியார் பிறந்தநாள் என மூன்றையும் இணைத்து முப்பெரும் விழா திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு திமுக உருவாகி 75 ஆண்டுகள் ஆகும் நிலையில், பவள விழா காணவுள்ளது.

திமுக பவள விழா உள்ளிட்ட முப்பெரும் விழா, வரும் செப்.17-ம் தேதி சென்னை, நந்தனம் YMCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த சூழலில், திமுக 75 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு இதற்கான இலச்சினையை (LOGO) வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணாவின் சிலை மற்றும் அவரது திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதைத்தொடர்ந்து திமுகவின் பவள விழாவுக்கான இலச்சினையை திறந்து வைத்தார். பெரியார், அண்ணா, கலைஞர் என முப்பெரும் தலைவர்கள் உருவம் பொறித்த இலச்சினையில், 75 திமுக பவள விழா என்றும், உதயசூரியனின் சின்னமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, தேனாம்பேட்டையில் அமைந்துள்ள திமுக இளைஞர் அணி தலைமை அலுவலகமான அன்பகத்தில், கழக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Also Read: சென்னை மக்களுக்கு அறிவிப்பு : விநாயகர் சதுர்த்தி ஊர்வலைத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் -முழு விவரம்!