Tamilnadu
உத்தரகாண்ட் நிலச்சரிவு : வீடியோ வெளியிட்டு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த மீட்கப்பட்ட தமிழர்கள் !
உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஆதி கைலாஷ் என்ற பகுதிக்கு தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இருந்து 12 பெண்கள், 18 ஆண்கள் என 30 பேர் புனித பயணம் மேற்கொண்டனர். இந்த சூழலில் தவாகாட் - தானாக்பூர் தேசிய நெடுஞ்சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால், அந்த வழியாக திரும்பி வர இருந்த தமிழர்கள், நிலச்சரிவு காரணமாக கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.
தொடர்ந்து அந்த பகுதி மிகவும் ஆபத்தானது என்பதால், அவர்கள் அனைவரும் அப்பகுதியில் உள்ள ஆசிரமம் ஒன்றில் தங்கி, தங்கள் குடும்பத்தினருக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் தமிழ்நாடு அரசு களத்தில் இறங்கியது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்பேரில் அரசு உயர் அதிகாரிகள், அந்த மாநில அரசை தொடர்பு கொண்டு தேவையானவற்றை செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மீட்பு நடவடிக்கையில் முதலில் 15 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக கலந்துரையாடினார். தொடர்ந்து அவர்களை தைரியமாக இருக்கச் சொல்லி, நம்பிக்கைக் கொடுத்தார்.
இந்த நிலையில் தற்போது புனித பயணம் மேற்கொண்ட தமிழகத்தை சேர்ந்த 30 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு தர்சுலா என்ற நகரத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். அங்கிருந்து அனைவரும் புதுதில்லி வந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்பவுள்ளனர். துரித நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மீட்கப்பட்ட அனைவரும் வீடியோ வெளியிட்டு தங்கள் நன்றியினை தெரிவித்தனர்.
இதுகுறித்து வெளியான செய்தி குறிப்பு வருமாறு :
உத்தரகாண்ட் மாநிலம், ஆதிகைலாஷ் யாத்திரைக்கு சென்ற கடலூர் மாவட்டம். சிதம்பரம் வட்டத்தைச் சேர்ந்த 30 தமிழர்கள் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் தாவாகாட் பகுதியின் அருகில் சிக்கினர் என்பது குறித்து தகவல் பெறப்பட்ட உடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு அரசு உயர் அலுவலர்கள் உத்தரகாண்ட் அரசை தொடர்புகொண்டு சிக்கியுள்ள தமிழர்களை விரைந்து மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில், கடலூர் மாவட்ட நிர்வாகம் உத்தரகாண்ட் மாநிலம் பித்தோர்கர் மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு. மீட்புப் பணிகளை கண்காணித்து வருகின்றனர். உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள 30 தமிழர்கள் காயம் ஏதுமின்றி. அருகில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்பட்டுள்ளது என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (15.9.2024) காலை முகாம் அலுவலகத்திலிருந்து உத்தரகாண்ட்டில் சிக்கியுள்ள தமிழர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்து, கவலைப்பட வேண்டாம் அவர்களை விரைந்து மீட்க தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்தார். யாத்திரை சென்ற தமிழர்கள் தங்களை மீட்க நடவடிக்கை எடுத்துவரும் முதலமைச்சர் அவர்களுக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
உத்தரகாண்ட் அரசால் இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் துவங்கப்பட்டு, முகாமில் உள்ள 30 தமிழர்களும் பத்திரமாக மீட்கப்பட்டு, அவர்கள் அனைவரும் தர்சுலா என்ற நகரத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர் என்று உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்ட பயணிகள் அங்கே ஓரிருநாட்கள் தங்கி பின்னர் புதுதில்லி வந்து விமானம் மூலம் தமிழ்நாடு திரும்ப உள்ளார்கள்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!