Tamilnadu
திராவிட மாடல் ஆட்சியை பாராட்டும் ஆன்மிகவாதிகள் : அமைச்சர் சேகர்பாபு பெருமிதம்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு பவானிஅம்மன் திருக்கோயில் சிறப்பு வாய்ந்தது. கடந்த 2022 - 23 சட்டமன்ற மானிய கோரிக்கை அறிவிப்பின்படி பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்திற்கு தங்கத்தேர் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. ஆலயத்திற்கு சொந்தமான சுமார் 11கிலோ தங்கம், 27 கிலோ வெள்ளி, 379 செம்பு ஆகியவற்றை உருக்கி தங்கத்தேர் செய்யப்பட்டது.
சுமார் 8.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 11.5 அடி உயரத்தில் இரண்டு குதிரைகள் பூட்டப்பட்டு பிரம்மன் தேரோட்டியாக தங்கத்தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் இன்று தொடங்கப்பட்டது. தங்கத்தேர் வெள்ளோட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு,”பக்தர்கள் பயன்பாட்டில் இல்லாமல் ஓடாமல் இருந்த 12 திருத்தேர்கள் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 12 ஆண்டுகள் ஓடாமல் இருந்த ராமேஸ்வரம் திருத்தேர், 10 ஆண்டுகள் ஓடாமல் இருந்த சமயபுரம் திருத்தேர், 8 ஆண்டுகள் ஓடாமல் இருந்த கோட்டை மாரியம்மன் திருத்தேர் ஆகியவை தி.மு.க ஆட்சி அமைந்தபின் சீரமைக்கப்பட்டு ஓட்டிய பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு சேரும் என்றார்.
ஓடாமல் நின்றிருந்த திருவாரூர் ஆழித்தேரை கலைஞர் சீர்படுத்தி ஓட்டியது போல, தற்பொழுது முதலமைச்சர் தலைமையிலான அரசு அமைந்த பிறகு சிவகங்கை மாவட்டத்தில் ஓடாமல் இருந்த கண்டதேவி திருத்தேர் 18 ஆண்டுகளுக்குப் பிறகு அங்குள்ள இரு சமூகத்தினர் இடையே ஒற்றுமையை ஏற்படுத்தி தேரை ஓட்ட வைத்த பெருமை தமிழ்நாடு முதலமைச்சர் உடன் சேரும்.
தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு புதியதாக 5 தங்க திருத்தேர்கள் ஏற்படுத்தி தரப்படும் என அறிவிக்கப்பட்டது எனவும் அந்த அறிவிப்பின்படி தற்போது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 8.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்க திருத்தேர் வடிவமைக்கப்பட்டு வெள்ளோட்டம் நடத்தி பக்தர்கள் நேர்த்தி கடனுக்காக ஒப்படைக்கப்பட்டதாக தெரிவித்தார். மீதமுள்ள 4 தங்க திருத்தேர், விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் எனவும், 9 வெள்ளித் தேர் ஏற்படுத்தித் தரப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் திருத்தணியில் வெள்ளித்தேர் பயன்பாட்டிற்கு வந்துள்ள சூழலில் மீதமுள்ள 8 வெள்ளித்தேர்களும் விரைவில் வெள்ளோட்டம் விடப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
வரலாற்றில் இல்லாத வகையில் நாளை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 101 ஆலயங்களில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது.ஆன்மீகவாதிகள் புகழும் ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்
-
Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !
-
தொடரும் அங்கீகாரம்... 55-வது கோவா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு ‘அயலி’ பரிந்துரை!
-
“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !
-
அவதூறு பேச்சு... பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி கைது... புழல் சிறையில் அடைப்பு !