Tamilnadu

4,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்! : தமிழ்நாட்டில் மும்முரமாக செயல்படுத்தப்படும் மதுவிலக்கு நடைமுறை!

தமிழ்நாட்டில் எரிசாராயம் ஏற்கனவே தடைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எரிசாராயத்திற்கு எதிரான மதுவிலக்கு சட்டத்தை கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு.

இதனையடுத்து, தமிழ்நாட்டில் எரிசாராயம் விற்பனைக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அவ்வகையில், கடந்த 11.09.2024 அன்று கோவை மாவட்டம், ஆனைமலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தமிழக-கேரள எல்லையில் உள்ள செம்மணாம்பதி கிராமத்தில் உள்ள தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கேரள கலால்துறையினர் அளித்த தகவலின் அடிப்படையில்,

வால்பாறை துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில், ஆனைமலை காவல்துறையினர் மற்றும் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல்துறையினர் இணைந்து செம்மணாம்பதியில், கேரள மாநிலம் எர்ணாகுளம், பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த டோனி குரியகோஸ் (45) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அத்தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 150 கேன்களில் பதுக்கிவைத்திருந்த 4,500 லிட்டர் எரிசாராயத்தைப் பறிமுதல் செய்தனர்.

இது குறித்து பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினர் Cr.No.563/24 u/s.4(1- A) TNP Act and 7 of TNRS Rules 2000 பிரிவின்படி வழக்குப் பதிவு செய்தனர். மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டதன் பேரில், தனிப்படைகள் அமைக்கப்பட்டு மேற்படி வழக்கில் தொடர்புடைய நில உரிமையாளர் மற்றும் சம்மந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய எதிரியான கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த சபீஸ் ஜேக்கப் (41) நேற்று (12.09.2024) கேரளாவில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரியவருகிறது .மேலும் இவ்வழக்கில் தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளபட்டு வருகிறது.

Also Read: “கேள்வி கேட்டால், அவமானப்படுத்துவதா?” : பா.ஜ.க.வின் அடக்குமுறை செயலுக்கு, பிரியங்கா காந்தி கண்டனம்!