Tamilnadu

“தொழிற்சாலை தொடங்க உகந்த மாநிலம் தமிழ்நாடு!” : CEAT துணைத் தலைவர் ஜெய்சங்கர் குருப்பல் பேட்டி!

தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சிக்கு பின், முன்னெடுக்கப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாடு மற்றும் இதர நடவடிக்கைகளால், தேசிய முன்னணி நிறுவனங்கள், உலக முன்னணி நிறுவனங்கள் பல, முந்தியடித்துக்கொண்டு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான சியாட்(CEAT TYRES) சென்னை உற்பத்தி ஆலையில் ட்ரக் பஸ் ரேடியல் (TBR)பிரிவில் தயாரிப்பை மேற்கொள்ள இருப்பதை சென்னை தனியார் நட்சத்திர விடுதியில் அறிமுகம் செய்தது.

அடுத்த 12 மாதங்களில் புதிய ட்ரக் பஸ் ரேடியல்(TBR) தயாரிப்பு மூலமாக பிரிமியம் பயணிகள் கார் ரேடியல் (PCR) டயர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ரேடியல் டயர்களின் உற்பத்தி உட்பட CEAT தற்போதைய உற்பத்தி திறன்களை நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் CEAT நிர்வாக இயக்குனரும் தலைமை நிர்வாக அதிகாரியமான அர்னாப் பானர்ஜி, CEAT உற்பத்தி துறையில் மூத்த துணைத் தலைவர் ஜெய்சங்கர் குருப்பல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய, CEAT உற்பத்தி துறையில் மூத்த துணைத் தலைவர் ஜெய்சங்கர் குருப்பல், “சாலை, கட்டமைப்பு, தண்ணீர் வசதிகள் என அனைத்து வகைகளிலும் தமிழ்நாடு அரசு அடிப்படை வசதிகளை செய்து தந்து உதவி வருகிறது. அதன் அடிப்படையில் இங்கு உற்பத்தி ஆலையை தொடங்கியுள்ளோம். இந்த ஆலையின் வழி சுமார் 500 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும்.

தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் தொடங்க உகந்த சூழல் நிலவுகிறது. தொழிற்சாலைகள் தொடங்க அரசின் சார்பில் ஊக்கத்தொகைகள், மின்சாரம் சாலை தண்ணீர் என சிறந்த கட்டமைப்புகள் உள்ளது. மேலும் தொழிற்கல்வி படித்தவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர். மேலும் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் என‌ தொழிற்சாலைகள் தொடங்க உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது” என்றார்.

Also Read: செபி தலைவர் மீது Hindenburg மீண்டும் குற்றச்சாட்டு!: பதில் அளிக்காமல் அலட்சியமாக இருக்கிறாரா மாதவி புச்?