Tamilnadu

“கண்ணை இமை காப்பது போல, மாணவர்களை தமிழ்நாடு அரசு காக்கிறது!” : தலைமைச் செயலாளர் முருகானந்தம் பேச்சு!

சென்னை, சாந்தோம் அருகில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரக கூட்ட அரங்கில் தமிழ்நாடு இணையவழி விளையாட்டு ஆணையம் சார்பில் இணையவழி விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ‘இணையவழி விளையாட்டிற்கு அடிமையாதலும், மாணவர்களுக்கான எதிர்வினைகளும்’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு முகாமை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

மேலும், இணையவழி விளையாட்டுகள் மூலம் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பான விழிப்புணர்வு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதன் பிறகு விழா மேடையில் பேசிய தலைமைச் செயலாளர் முருகானந்தம்,

“தமிழ்நாட்டை பொறுத்தவரையில் அனைத்து துறையிலும் வளர்ச்சி பெற்று இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக திகழ்கிறது.

இணையதள விளையாட்டு தீமைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு 2022-ல் இதற்கான சட்டத்தை இந்தியாவிலே முதன்முறையாக கொண்டு வந்து சாதனை படைத்தது.

“ஓடி விளையாடு பாப்பா நீ கூடி விளையாடு பாப்பா” என்று பாரதியார் சொன்னார். ஆனால், இன்று ஓடியும் விளையாடுவதில்லை கூடியும் விளையாடுவதில்லை

முடிந்த வரை குழந்தைகளிடம் மொபைல் போன்களை கையில் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி தற்போதைய அரசு மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பெரும் பங்களிப்பை அளித்து வருகிறது. விளையாட்டை ஊக்குவிப்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு செயல் திட்டங்களை இளைஞர்களுக்கு மேற்கொண்டு வருகிறார்.

இணையம், கணினி, ஸ்மார்ட்போன் போன்ற புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு இன்றியமையாததாக இருக்கின்றது. ஆன்லைன் கேமிங் பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்திருக்கிறது. காலப்போக்கில் இன்னும் அதிகரிக்கும்.

சூதாட்டம் விளையாட்டுக்கள் சமுதாயத்தில் எந்த மாதிரி தீமைகளை ஏற்படுத்துகின்றது என்பதை கருத்தில் கொண்டுதான் தமிழ்நாடு அரசு, ஆன்லைன் விளையாட்டை தடுக்கும் வகையில், 2022-ல் சட்டத்தை இந்தியாவில் முதல் மாநிலமாக கொண்டு வந்தது.

மனிதன் கூட்டமாக தான் இருக்க முடியும், அதுதான் இயற்கை. அதற்கு எதிராக ஆன்லைன் கேம் மாற்றுகிறது. மாணவர்கள் நிழல் உலகத்தில் உலாவிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதற்கு ஆன்லைன் கேம்மிங் உருவாகிறது.

இந்த இணையதள விளையாட்டுகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் மாணவர்களின் வளர்ச்சியை பாதிக்கிறது.

இதனால் தான் பல அரசுகள் ஆன்லைனில் தடை செய்கின்றன. சீனா, ஜப்பானில் தடை செய்யப்பட்டுள்ளது. இன்று கூட ஆஸ்திரேலியாவில் 16 வயதிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் கேம் தடை சட்டம் கொண்டு வந்ததற்கு ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா காலத்தில் தான் மொபைல்கள் மாணவர்கள் கையில் அதிக அளவு சென்று சேர்ந்தது. இது குறித்து சரியான ஆய்வறிக்கைகள் இல்லை. எனினும், மொபைல்கள் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஒரு addictionஆக மாறியுள்ளது.

ஆகவே, தமிழ்நாடு அரசு இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ளது. கண்ணை இமை காப்பது போல மாணவர்களையும் இளைஞர்களையும் இந்த அரசு காக்கிறது.

மாணவர்களும், இளைஞர்களும் தான் நம் எதிர்காலம்” என்றார்.

Also Read: “தமிழ்நாடு மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்காமல் பாரபட்சம் பார்க்கும் பா.ஜ.க”: செல்வப்பெருந்தகை கண்டனம்!