Tamilnadu

இலங்கை கடற்படை கப்பல் மோதி நாகை மீனவர்கள் படகு மூழ்கி விபத்து : மீனவர்கள் குமுறல் !

தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. தினந்தோறும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்கள் மீன் பிடி படகுகளை பறிமுதல் செய்தும் துன்புறுத்தி வருகிறது. மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பல முறை கடிதம் எழுதியுள்ளார்.

அதோடு இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்திலும் தமிழ்நாடு எம்.பி-க்கள் குரல் கொடுத்துள்ளனர். இருப்பினும் இதனை ஒன்றிய பாஜக அரசு பெரிதாக எண்ணவில்லை. இந்த சூழலில் தற்போது இலங்கை கடற்படை கப்பல் மோதி நாகை மீனவர்கள் படகு கடலில் மூழ்கி ஏற்பட்ட விபத்தில் மீனவர்களின் மீன் பிடி பொருட்கள் அனைத்தும் கடலில் மூழ்கியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த செருதூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த தர்மன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் 4 மீனவர்கள் நேற்று மதியம் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். கோடியக்கரை தென்கிழக்கே 15 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்து கொண்டிருக்கும் போது இலங்கை கடற்படை கப்பல் எதிர்பாராத விதமாக நாகை மீனவர்கள் படகின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் படகில் சென்ற 3 மீனவர்களை சக மீனவர்கள் மீட்டு கரை வந்த நிலையில், சதீஷ் என்ற மீனவர் காணமால் போயுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், தற்போது அவரையும் மற்ற மீனவர்கள் மீட்டு கரை திரும்பி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை கடற்படை கப்பல் மோதிய விபத்தில் சுமார் 600 கிலோ எடை கொண்ட வலை, மற்றும் மீன்பிடி உபகரணங்கள் என ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கடலில் மூழ்கி விட்டதாக கரை திரும்பிய மீனவர்கள் மீனவ பஞ்சாயத்தாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

Also Read: “NEP-ன் ஆக்கக் கோட்பாடுகளுக்கு முன்னோடி தமிழ்நாட்டின் கல்வி!” - தர்மேந்திரனுக்கு அமைச்சர் அன்பில் பதிலடி!