Tamilnadu

உடல் உறுப்பு தானம் : “இந்தியாவிற்கே முன்னோடி தமிழ்நாடு” - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

தமிழ்நாட்டில் பலரும் உடல் உறுப்பு தானம் செய்து வருகின்றனர். இதனை மேலும் ஊக்குவிக்கும் விதமாக உடல் உறுப்பு தானம் செய்வோரின் உடலுக்கு அரசு மரியாதையை செலுத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதைத்தொடர்ந்து மக்கள் மத்தியில் இதற்கான ஆர்வம் அதிகரித்தே வருகிறது. அதன்படி உடல் உறுப்பு தானம் செய்பவரின் உடலுக்கு, அரசு சார்பில் அமைச்சர்களோ, எம்.எல்.ஏ-க்களோ சென்று மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பல்லாவரத்தை சேர்ந்த முரளி என்பவர் மூளைச்சாவு அடைந்ததை அடுத்து அவரது உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் முரளியின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, "கடந்த ஆண்டு செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கி இன்று வரை உடல்  உறுப்பு தானம் செய்த 250-க்கும் மேற்பட்டவர்களுக்கு அரசு மரியாதை செலுத்தி வருகிறோம். உடல் உறுப்பு தானத்தின் விழிப்புணர்வு தமிழக மக்களிடையே அதிகரித்துள்ளது.

இந்தியாவிற்கே வழிகாட்டியாக முன்னோடியாக திகழ்கிறது தமிழ்நாடு. உடல் உறுப்பு தானம் செய்வோரரின் உடலுக்கு அரசு மரியாதை என்பதை தமிழகம்தான் முதன்முதலில் அறிவித்தது. இதை பார்த்தே ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்கள் இதனை அறிவித்து தற்போது வெற்றிகரமாக செய்து வருகிறது. 14,300பேர் உடல் உறுப்பு தானம் செய்ய  இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 7,015 உடல்  உறுப்புகள் தேவைப்படுகிறது.

ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை உடல் உறுப்பு தானம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி  வருகிறது. ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மட்டும் மூளைசாவு ஏற்பட்ட 32 பேர்  உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையிலும் உடல் உறுப்பு தான மையம் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது" என்றார்.

Also Read: நடு ரோட்டில் இளம்பெண் வன்கொடுமை... தடுப்பதற்கு பதிலாக வீடியோ எடுத்த கொடூரர்கள்... பாஜக மாநிலத்தில் அவலம்!