Tamilnadu

அசோக்நகர் அரசுப்பள்ளி தலைமையாசிரியர் பணியிட மாற்றம் : பள்ளிக் கல்வித்துறையின் உடனடி நடவடிக்கை!

சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் மகா விஷ்ணு என்பவர் அழைக்கப்பட்டு, மாணவிகளிடையே “முன்ஜென்ம தவறுகளால் மாற்றுத்திறனாளியாக பிறக்கிறார்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

அதனை பிற்போக்குத்தனமான பேச்சு என விமர்சித்த ஆசிரியரையும் தரக்குறைவாக பேசியுள்ளார். இதனால், இச்சம்பவம் பெரும் சிக்கலானது.

மேலும், மதபோதனை, மந்திரம், மாந்திரீகம், மறுப்பிறவி என சர்ச்சைப்பேச்சுகளை மகா விஷ்ணு பேசியதும் விசாரணையில் தெரியவந்தது.

இதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸும் தங்களது கண்டனத்தை தெரிவித்து, உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.

அதன் படி, இனி கல்வி சாராத நிகழ்வுகளை பள்ளிகளில் நடத்த, அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், பள்ளி நிகழ்ச்சிகளுக்கு புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், சர்ச்சை நிகழ்வை பள்ளிக்குள் அனுமதித்த அசோக்நகர் அரசுப்பள்ளி தலைமையாசிரியரிடம், காவல்துறை விசாரணை நடத்தியது. அதன் பிறகு, தலைமையாசிரியர் தமிழரசி, பணியிடமாற்றம் செய்யப்படுகிறார் என்றும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், சர்ச்சைக்குரிய வகையிலும், ஆசிரியரை தரக்குறைவாகவும் பேசிய மகா விஷ்ணு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் உறுதியளித்தார்.

Also Read: ”என் துறை ஆசிரியரை அவமானப்படுத்திய நபரை சும்மா விடமாட்டேன்” : அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உறுதி!