Tamilnadu

”புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதை இல்லாத ஏமாற்றத்தில் பேசும் ஆளுநர்” : சு.வெங்கடேசன் MP பதிலடி

கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. அண்மையில் ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்ட உயர்கல்வி நிலையங்களின் தரவரிசை பட்டியலில், முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டிலிருந்து 22 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன.

முதல் 50 அரசு பல்கலைக்கழகங்கள் பட்டியலில் தமிழ்நாடு அரசின், அண்ணா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு விவசாய பல்கலைக்கழகம், ஆகிய 10 பல்கலைக்கழகங்கள் இடம் பிடித்துள்ளன. அதிலும், இந்தியாவிலேயே முதல் மாநில பல்கலைக்கழகம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.

இப்படி தொடக்க கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. இதனால்தான் ஒன்றிய அரசின் குலக்கல்வியை போதிக்கும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது. மேலும் இருமொழி கொள்கையிலும் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது.

இதை தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றிய அரசு, கல்விக்கு தரவேண்டிய நிதியை கொடுக்காமல் நிறுத்திவைத்துள்ளது. தற்போது ஆளுநரை வைத்து மாநில அரசின் பாடத்திட்டத்தை விமர்சிக்க தொடங்கி இருக்கிறது.

தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கும் ஆர்.என்.ரவி, ”தேசிய பாடத்திட்டத்தை ஒப்பிடும்போது,மாநில பாடத்திட்டங்கள் தரம் மோசமாக உள்ளது” என பேசியுள்ளார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கண்டித்துள்ளனர். மேலும் கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,”மாநில பாடத்திட்டம் தரம் தாழ்ந்து இருப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி கூறியுள்ளார். புல் புல் பறவை சாவர்க்கரை காப்பாற்றிய கதையோ, முதலைகளிடமிருந்து மோடி தப்பித்த கதையோ தமிழ்நாட்டு பாடங்களில் இல்லை. தனக்கு பிடித்த காட்சி இல்லாத ஏமாற்றத்தை வெளிப்படுத்தும் உரிமை ஆளுநருக்கும் உண்டு” என ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Also Read: முன்னிலை வகிக்கும் தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் : ஒன்றிய அமைச்சகம் வெளியிட்ட NIRF தரவரிசை பட்டியல்!