Tamilnadu

மாநில கல்வி குறித்த அவதூறு பேச்சு : “ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” - செல்வப்பெருந்தகை !

சமூக சம உரிமையின் அடிப்படையில் அனைவருக்கும் கல்வி என பாலின பாகுபாடு, வகுப்புவாதம் உள்ளிட்ட பிரிவினைகள் இல்லா சமூகநீதி பகிரும் கல்வியை வழங்குகிற மாநில அரசாக தமிழ்நாடு அரசு திகழ்கிறது. அதன் படி, இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் கல்வி விகிதம் பல மடங்கு உயர்ந்திருக்கிறது.

கல்வி சேர்க்கையில், தேசிய சராசரியும் தமிழ்நாட்டின் சராசரியை விட பின் தங்கியே இருக்கிறது. மாநில அரசின் பாடத்திட்டத்தால் படித்து பட்டம்பெற்ற உலகமே வியந்து பாராட்டும் இஸ்ரோவின் சந்திரயான், PSLV ஆதித்யா L 1 போன்றவைகளின் முக்கிய விஞ்ஞானிகளான மயிலசாமி அண்ணாதுரை, வீரமுத்துவேல், நிகர் ஷாஜி உள்ளிட்ட பலரும் உருவாகியுள்ளனர்.

கல்வி பெற்ற இளைஞர் சமூகத்தை, நல்ல பணிகளில் ஈடுபடுத்தும் நடவடிக்கைகளையும், “நான் முதல்வன்” உள்ளிட்ட திட்டங்கள் வழி, தமிழ்நாடு அரசு செயலாற்றி வருகிறது. எனினும், தமிழ்நாடு அரசையும், தமிழ்நாட்டின் பெருமையையும் தொடர்ந்து சீர்குலைக்க எண்ணும் நோக்கில், கடந்த மூன்றாண்டுகளாக இயங்கி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது மற்றொரு வெறுப்பை உமிழ்ந்துள்ளார்.

மாநிலக்கல்வியை, தேசிய கல்வியுடன் தொடர்புபடுத்து, தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தை தரக்குறைவாக பேசியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி. தேசிய கல்விக் கொள்கைக்கு தமிழ்நாடு அரசு ஒப்புக்கொள்ளாத காரணத்தினால், நிதி நிறுத்தி வைத்து வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு. இருப்பினும் தமிழ்நாடு அரசு தேசிய கல்விக் கொள்கைக்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், தற்போது மாநில அரசின் பாடத்திட்டம் குறித்து பாஜகவின் PRO-வாக செய்லபடும் ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் அவதூறு பரப்பி வருகிறது ஒன்றிய பாஜக அரசு.

அதன்படி மாநில அரசின் பாடத்திட்டம் குறித்து ஆளுநர் ரவி அவதூறு பரப்பி வரும் நிலையில், இதற்கு பல தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

"தமிழ்நாட்டின் ஆளுநர் கடந்த காலங்களில் புதியக் கல்விக் கொள்கையை பற்றி அனைத்து மேடைகளிலும் பேசி வந்தார். ஆனால், ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏற்காது என்று உறுதியாகத் தெரிந்தவுடன், மாநில கல்விக் கொள்கை மீது அவதூறையும், சேற்றையும் வீசத் தொடங்கியுள்ளார்.

இத்தனை ஆண்டு காலம் தமிழ்நாட்டில் ஆளுநராக இருந்தவர், மாநில கல்விக் கொள்கை பற்றி கருத்துக் கூறாமல் தற்போது தரம் தாழ்ந்து விமர்சிப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பி.ஆர்.ஓ.போல் செயல்படுவதை விட்டுவிட்டு தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையைப் பற்றிய தன்னுடைய கருத்துக்கு ஆளுநர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்."

Also Read: இரயில் நிலையத்தில் தொலைந்து போன சிறுமி... வெறும் 3 மணி நேரத்தில் தாயிடம் ஒப்படைத்த போலீஸ் !