Tamilnadu

”இந்திய விளையாட்டுத்துறை வளர்ச்சியின் முன்னோடி தமிழ்நாடு” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

சென்னையில் மிக பிரம்மாண்டமாக இரவு நேர பார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகள் இரண்டு நாட்கள் வெற்றி கரமாக நடந்து முடிந்துள்ளது. ஆகஸ்ட் 31 ஆம் தேதி பார்முலா 4 ஸ்ட்ரீட் சர்க்யூட் போட்டிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதனைத் தொடர்ந்து பயிற்சிப் போட்டிகள், தகுதி சுற்றுப்போட்டிகள் நடைபெற்றது. இந்தியன் ரேசிங் லீக் மற்றும் ஜேகே எஃப்எல் ஜிபி 4 என மூன்று வகை போட்டிகளில் பிரதான சுற்று போட்டிகள் நடைபெற்றது.

பார்முலா இந்தியன் ரேஸில் இரண்டாவது பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், நடிகருமான நாக சைதன்யா ஆகியோர் பரிசுகளை வழங்கினர். இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹைதராபாத் அணியின் அலிபாய் முதலிடத்தையும், அகமதாபார் அணியின் திவி நந்தன் இரண்டாவது இடத்தையும், ஜேடன் பாரியர்ட் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தய போட்டிக்கு சினிமா நட்சத்திரங்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். குறிப்பாக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இப்படி ஒரு போட்டியை காண ஏற்பாடு செய்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு எனும் பெருமையை உறுதியாகத் தக்கவைப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”'பார்முலா 4 சென்னை' கார் பந்தயத்தை மாபெரும் வெற்றியடையச் செய்த உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

செஸ் ஒலிம்பியாட், சென்னை ஓபன் 2023 டென்னிஸ் தொடர், ஆசிய ஆடவர் ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2023, பன்னாட்டு அலைச்சறுக்குப் போட்டி 2023, ஸ்குவாஷ் உலகக் கோப்பை 2023 மற்றும் கேலோ இந்தியா 2023 ஆகியவற்றின் வெற்றிகளைத் தொடர்ந்து, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுக்கான சிறப்பான வளர்ச்சிப்பாதையை அமைத்து வருகிறது.

உலகத் தரத்திலான வசதிகள், உத்திமிகுந்த முதலீடுகள் ஆகியவற்றின் வாயிலாக நாம் வெறுமனே தொடர்களை மட்டும் நடத்திக்காட்டவில்லை, இந்திய விளையாட்டுத்துறை வளர்ச்சியின் முன்னோடியாக விளங்கி வருகிறோம்.

அதனால்தான் இந்திய ஒலிம்பிக் அணியிலும் தமிழ்நாடு தனிச்சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. எல்லைகளைத் தொடர்ந்து விரிவடையச் செய்வோம், 'இந்தியாவின் விளையாட்டுத் தலைநகரம் தமிழ்நாடு' எனும் பெருமையை உறுதியாகத் தக்கவைப்போம்” என தெரிவித்துள்ளார்.

Also Read: பிரமாண்டமாக நிறைவடைந்த சென்னை Formula 4 கார் பந்தயம் : வெற்றியாளர்கள் விவரம் !