Tamilnadu

தமிழ்நாட்டின் 25 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு : அத்தியாவசிய பொருள்களின் விலை உயரும் அபாயம் !

இந்தியாவில் சாலைகள் 4 வழி சாலையாக மேம்படுத்தப்பட்ட பின்னர், அங்கு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்கச்சாவடி கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டணத்தை குறைக்க வேண்டும் மற்றும் சுங்கச்சாவடிகளையும் குறைக்க வேண்டும் என பொதுமக்கள் உட்பட மாநில அரசுகள் ஒன்றிய அரசிடம் வலியுறுத்தி வருகிறது.

ஆனாலும் ,ஒன்றிய அரசு சுங்க கட்டண தொகையை அதிகரித்தவண்ணம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் சுங்க கட்டணங்களை நேரடியாகப் பணம் செலுத்துவதை தவிர்ப்பதற்காக பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது.

பாஸ்டேக் முறையை அமல்படுத்தப்பட்டதால் போக்குவரத்துத் துறைக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக ஒன்றிய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். ஆனாலும், இந்த வருவாய் போதவில்லை என ஒன்றிய பாஜக அரசு மேலும் மேலும் சுங்கக்கட்டணத்தை அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மீதம் இருக்கும் சுங்கச்சாவடிகளிலும் கட்டணஉயர்வு அமலுக்கு வந்துள்ளது.

5 முதல் 7 சதவீதம் வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில், ரூ.5 முதல் ரூ.45 வரை கட்டணங்கள் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Also Read: ஃபார்முலா 4 கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் : சென்னையில் சீறிப்பாய்ந்த கார்கள்!